
அறிமுக இயக்குனர் ஸ்ரீஜார் இயக்கத்தில் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் ஷாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி மற்றும் யோகிபாபு நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் “முருங்கைக்காய் சிப்ஸ்”. டைட்டில் பார்த்ததுமே இது 18+ திரைப்படமாக இருக்குமோ என்று எண்ணுகிறீர்களா.? ஆம் இது 18+ திரைப்படம் தான் இது. முருங்கைக்காயை 18+-ல் சேர்த்த பெருமை இயக்குனர் கே பாக்யராஜையே சாரும்.., சரி நாம படத்துக்குள்ள போயிடலாம்..
கதைப்படி,
பெரியவர்களால் நிச்சயக்கப்பட்டு ஷாந்தணு மற்றும் அதுல்யா ரவி இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்து முதல் இரவு அறைக்குள் செல்லும் ஷாந்தணுவிற்கு அவரது தாத்தாவாக வரும் பாக்யராஜ் ஒரு “செக்” வைக்கிறார். நமக்கு 300 கோடி அளவிற்கு சொத்து இருக்கிறது. அதை காப்பாற்ற வேண்டுமென்றால் பெண்களின் வலைக்குள் சிக்காதவனாக இருக்க வேண்டும்.
முதலிரவில் எவன் ஒருவன் தன் மனைவியை தொடாமல் இருக்கிறானோ, அவன் தான் எதற்கும் சபலப்படாமல் சொத்தை காப்பாற்றுவான். ஆகவே, நீ உன் மனைவியுடன் முதலிரவில் உடலுறவு கொள்ளக்கூடாது. உடலுறவு கொள்ளாமல் இருந்தால் 300 கோடி ரூபாய் சொத்து உனக்கு, அப்படி இருந்துவிட்டால் அனைத்து சொத்தும் ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விடுவேன் என்று பாக்யராஜ், சாந்தணுவிற்கு “செக்” வைக்கிறார்.
முதலிரவில் உடலுறவு கொண்டால் மட்டுமே வாரிசு விருத்தியடையும் இல்லையென்றால் வாரிசு கிடையாது அப்படியொரு தோஷம் இருப்பதாக அதுல்யாவின் அத்தையாக வரும் ஊர்வசி, அதுல்யாவிற்கு கூறுகிறார்.
உடலுறவு வேண்டும் என்ற முனைப்போடு அதுல்யாவும், உடலுறவு வேண்டாம் என்ற முனைப்போடு சாந்தணுவும் முதலிரவு அறைக்குள் நுழைகிறார்கள்.
முதலிரவில் உடலுறவு நடந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சாந்தணு, கதைக்கு என்ன தேவையோ அது கச்சிதமாக கொடுத்திருக்கிறார். அதுல்யாவுடனான காட்சிகளில் மிளிர்கிறார். பாக்யராஜுடனான க்ளைமாக்ஸ் காட்சியில் மனதை தொடுகிறார் சாந்தணு. நடிப்பில் எவ்வித குறைபாடு இல்லாமல் நடிக்கும் சாந்தனு, எடுக்கும் கதையில் சற்று கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் வலம் வரும் நாயகனாக இருப்பார்.
நாயகி, அதுல்யா நடிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அழகான தேவதையாக இருப்பது முக்கியமில்லை, அழகாக நடிப்பது தான் முக்கியம்.
பாக்யராஜ் & ஊர்வசிக்கு பெரிதான ஸ்கோப் படத்தில் இல்லை. யோகிபாபுவின் காமெடிகள் படத்திற்கு சற்றும் உதவாத ஒன்றாக தான் இருந்தது. மனோபாலா, மயில்சாமியின் காம்பினேஷன் படத்திற்கு சற்று பலம். 18+ காமெடி என்பதால், சற்று கலகலப்பூட்டுகிறார்கள்.
நல்ல ஒருகதையாக இருந்தாலும், அதை எடுத்துச் செல்லும் விதத்தில் இயக்குனர் சற்று தடுமாறியிருக்கிறார். காமெடிக்கான இடங்கள் படம் முழுவதும் இருந்தும், வசனங்களை உச்சியில் ஏற்றும் காட்சிகள் பல இருந்தும் இயக்குனர் அதை எதையும் செய்யாதது பெரும் ஏமாற்றமே.
தரண்குமாரின் இசையில் பின்னனி இசை ரசனை.. பாடல்கள் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது.
ரமேஷ் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு பெரிதாக ஈர்க்கவில்லை.
முருங்கைக்காய் சிப்ஸ் – வீரியம் இல்லை..