
பாப்பா ராவோ பிய்யாலா இயக்கத்தில் ஸ்ரேயா சரண், ஷர்மண் ஜோசி, பிரகாஷ் ராஜ் இவர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மியூசிக் ஸ்கூல்”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.
கதைப்படி,
இசைப்பயிற்சி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியில் சேர்கிறார் ஸ்ரேயா. ஐதராபாத்தில் இந்த பள்ளி உள்ளது. அதே பள்ளியில் நாடக ஆசிரியராக வருகிறார் சர்மன் ஜோஷி..
இவர்கள் இருவரும் இணைந்து இசை பள்ளி ஒன்றை தொடங்குகிறார்கள்.
இருவரும் மாணவ, மாணவிகளுக்கு இசை மற்றும் நாடக பயிற்சி அளிப்பதோடு, அவர்களை வைத்துக்கொண்டு ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்கிறார்கள்.
இதன் பயிற்சிக்காக மாணவ, மாணவிகளை கோவா அழைத்து செல்கிறார்கள்.
கோவாவில் பயிற்சியை முடித்துக்கொண்டு அனைவரும் ஐதராபாத் திரும்பும் நேரத்தில், லோக்கல் காவல்துறை கமிஷ்னர் பிரகாஷ்ராஜின் மகள் மாயமாகிவிடுகிறார். இந்த தகவல் பிரகாஷ் ராஜுக்கு தெரியவர, தனது மகளை தேடுவதோடு, ஐதராபாத்தில் அரங்கேர இருக்கும் நாடக நிகழ்ச்சியை நிறுத்தி ஸ்ரேயா மற்றும் சர்மன் ஜோஷியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்கிறார். மாயமான பெண் கிடைத்தாரா? தனது வாழ்நாள் கனவான ஸ்ரேயா – சர்மன் ஜோஷியின் நாடகம் அரங்கேறியதா? என்பதே படத்தின் மீதிக் கதை…
கதையின் நாயகியான ஸ்ரேயா தான் ஒட்டுமொத்த கதையையும் தாங்கிச் செல்லும் தூணாக நிற்கிறார். வழக்கமான துள்ளல் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும்படியான நடிப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார் ஷான். அளவான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார் சர்மன் ஜோஷ்.
பிரகாஷ் ராஜ்ஜின் அனுபவ நடிப்பு பெரிதாகவே படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. படத்தில் நடித்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவாக கொடுத்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இளையராஜாவின் பின்னணி இசை தரமாக இருந்தாலும், பாடல்கள் பெரிதாக மனதை கவரவில்லை.
கதையின் ஓட்டத்தில் பெரிதாக ஈர்ப்பு இல்லை. கதைக்களத்தில் சிறிதாக இல்லை பெரிதாகவே தொய்வு அடைய வைத்திருப்பதால் படத்தின் விறுவிறுப்பு குறைகிறது.
படத்தில் நடித்த நடிகர்களை கதையோடு ஒன்றி நடிக்க வைத்திருப்பதால் இயக்குனரை அதற்காகவே பெரிதாக பாராட்டலாம். நாமும் ஒருமுறை ரசித்து விட்டு வரலாம்.
மியூசிக் ஸ்கூல் – இசையுலகில் ஒரு பயணம்…