விமர்சனங்கள்

மரகதமலை – விமர்சனம் 3.5/5

நடிகர், நடிகைகள் : சந்தோஷ் பிரதாப் ( Parthiban ), தீப்ஷிகா ( Gayathri ), தம்பி ராமையா( Marga ), ஜெகன் ( Murga ), மாஸ்டர் சஷான்ந் ( Vikraman ), அரிமா வர்மன் (Rama) , கலைக்கோவர்மன்( Rama ), மகித்ரா ( Vikraman ),சம்பத் ராம் ( Mandhiravadhi )

தொழில் நுட்ப கலைஞர்கள் :

இசை – எல்.வி.முத்து கணேஷ்
ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா
எடிட்டிங் – பைஜு டான் பாஸ்கோ கலை – பி.சண்முகம்
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – சந்தோஷ்
பாடல்கள் – பா.விஜய், கே.டி.சேஷா
தயாரிப்பு நிறுவனம் – LG Movies

அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

முன்னொரு காலத்தில் பார்த்திபன் (சந்தோஷ் பிரதாப்) என்ற மன்னன் ஆண்டு வந்தான். இவரது மனைவியாக வருகிறார் காயத்ரி (தீப்ஷிகா). இவர்களுக்கு ஐந்து வயது மதிக்கத்தக்க மகன் விக்ரமன் இருக்கிறார்.

இவர் ஆண்ட நிலப்பரப்பில் இருக்கும் மரகதமலை என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் அடங்கிய செல்வங்கள் இருக்கின்றன. அந்த மலைக்குச் செல்ல இருக்கும் குறிப்பு ஒன்றை காலம்காலமாக பாதுகாத்து வருகிறது பார்த்திபனின் குடும்பம்..

அந்த குறிப்பை கைப்பற்ற கொள்ளை கும்பல் ஒன்று ஊருக்குள் வந்துவிட, குறிப்பை எடுத்து தனது மனைவி காயத்ரியிடம் கொடுத்து தப்பித்து விடுமாறு கூறிவிடுகிறார் பார்த்திபன். காயத்ரி உடன் தனது மகனையும் அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் காட்டிற்குள் புகுந்து விடுகிறார்.

காட்டிற்குள் புலி ஒன்று துரத்த, தனது மகனை காட்டிற்குள் தொலைத்து விடுகிறார். அதுமட்டுமல்லாமல், கையில் இருந்த குறிப்பையும் தவற விட்டுவிடுகிறார். இந்த சமயத்தில், தவத்தில் இருந்த முனிவரை எழுப்பியதற்காக காயத்ரியை கல்லாக மாற்றிவிடுகிறார் முனிவர்.

அதேசமயம், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த விக்ரமனை பலி கொடுத்தால் தனது அதீத சக்தி கிடைக்கும் என்று விக்ரமனை கடத்திவிடுகிறார் நரபலி ராட்சசன் சம்பத் ராம்..

காயத்ரி மீண்டும் பழைய நிலைக்கு வந்தாரா.?? குறிப்பு யார் கையில் சிக்கியது..?? பார்த்திபனுக்கு என்ன நடந்தது..??? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் நாயகனான சந்தோஷ் பிரதாப், தனது கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக செய்துமுடித்திருக்கிறார். பார்த்திபன் என்ற தனது கதாபாத்திரத்திற்கு எந்தவித குறையும் வைக்காமல் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். சண்டைக் காட்சி, தனது மனைவியுடனான காதல் காட்சி என அனைத்திலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

இவரது மனைவியாக வந்த தீப்ஷிகா, அழகிலும் நடிப்பிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். க்ளோஸ் அப் காட்சிகளில் தேவதையாக காட்சியளித்திருக்கிறார் தீப்ஷிகா..

மேலும், படத்தில் நடித்த தம்பி ராமையா, ஜெகன், மாஸ்டர் சஷான்ந், அரிமா வர்மன் ,கலைக்கோவர்மன், மகித்ரா,சம்பத் ராம் உள்ளிட்ட நடிகர்களும் இயக்குனர் சொன்னதை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.

படம் ஆரம்பிக்கும் போது படத்தின் காட்சியமைப்பாக இருக்கட்டும், எடுக்கப்பட்ட விதமாக இருக்கட்டும் நம்மை கதைக்குள் பயணப்பட வைத்துவிட்டது. காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் பிரம்மிக்க வைத்திருக்கிறது.

பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தில் பெரிதாக பேசப்படும் அளவிற்கு தனது காட்சியமைப்பைக் கொடுத்திருக்கிறார். குழந்தைகளுக்கு சொல்லப்படும் ஒரு கதையை மிகவும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஒவ்வொரு காட்சியையும் நன்றாகவே நகர்த்தியிருக்கிறார். மனித குரங்கு, புலி, டிராகன் என குழந்தைகளை கவரும் மிருகங்களை படத்திற்குள் கொண்டு வந்து படம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

வெட்டு குத்து, குடி, ஆபாச வசனங்கள் என எதுவுமில்லாமல் குழந்தைகளோடு திரையரங்கிற்குச் சென்று பார்க்கும்படியான ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே கதையை அழகாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

தம்பி ராமையா மற்றும் ஜெகன் இருவரின் காமெடி காட்சிகள் சற்று ட்ரை ஆக இருந்தது. சிறு குறு பிழைகள் இருந்தாலும், இரண்டு மணி நேரம் நம்மை குழந்தைகள் உலகத்திற்கு அழைத்துச் சென்றதற்காகவே இயக்குனரை பெரிதாக பாராட்டலாம்.

எல்.வி.முத்து கணேஷ் அவர்களின் இசையில் பின்னணி இசை தரமாக இருந்தது.

மொத்தத்தில்,

மரகதமலை – குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய ஒரு படைப்பு…

Facebook Comments

Related Articles

Back to top button