
பல வருட இடைவெளிக்குப் பிறகு அண்ணன் – தம்பியான செல்வராகவன் – தனுஷ் கூட்டணி இணைந்திருக்கின்றனர். படம் அறிவித்ததிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதளவில் தொற்றிக் கொண்டது. காரணம், இவர்கள் கொடுத்த படைப்பு அப்படியானது… சரி நாம இப்போ கதைக்குள்ள போயிடலாம்…
இரட்டைக் குழந்தைகளாக வருகின்றனர் கதிரும் பிரபுவும் (இளம் வயது தனுஷ் கேரக்டர்கள்)…
இதில் கதிர், சைக்கோத் தனமான கேரக்டரில் இருக்கிறார். அவ்வப்போது சில வேண்டாத செயல்களையும் செய்கிறார்.
இதனால் கோபமடையும் கதிர், தனது தந்தையை குத்தி கொலை செய்கிறார். இரு குழந்தைகளையும் தனித்தனியாக இருப்பது தான் நல்லது என ஜோசியர் ஒருவர் கூற, இதனால், கதிரை வேறு ஒரு இடத்தில் விட்டு பிரபுவோடு செல்கிறார் அவரது தாய்.
20 வருடங்கள் கழித்து பிரபு(தனுஷ்)வின் பிறந்த குழந்தையில் கையில் எடுக்கிறார். தனது பெண் குழந்தை, மனைவி இந்துஜாவோடு அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பிரபு.
சில வருடங்கள் செல்ல, பிரபுவின் மகள் அமானுஷ்ய சக்தி ஒன்றின் பேச்சைக் கேட்டு அதன்படியே நடக்க, பித்து பிடித்தவர் போன்று மாறுகிறார்.
உன் மகளை நான் விட்டுச் செல்ல வேண்டும் என்றால் கதிரை நீ கொலை செய்ய வேண்டும் என்று அந்த அமானுஷ்யம் பிரபுவிடம் கூற, மிகவும் அதிர்ச்சியடைகிறார் பிரபு.
தனது மகளை காப்பாற்ற கதிரை பிரபு கொலை செய்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் நாயகன் தனுஷ்… இந்த படத்திலும் பல மடங்கு அதிகமான உழைப்பைக் கொடுத்து கதிராகவும் பிரபுவாகவும் வாழ்ந்திருக்கிறார் தனுஷ்.
மிகவும் யதார்த்தமான கதாபாத்திரமான பிரபுவின் கேரக்டரில் ஒரு பெண்ணின் தந்தையாக வாழ்ந்திருக்கிறார். எமோஷ்னல் காட்சியில் ஒரு சாமானியனாக தனது நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
இடைவேளையில், எட்டிப்பார்க்கும் கதிரின் எண்ட்ரீ புல்லரிக்க வைக்கிறது. அதோடு இணைந்து வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, அந்த காட்சியை பார்க்கும் ஒவ்வொருவரையும் கட்டிப் போட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
படத்தில் நடித்த, இளம் நட்சத்திரங்கள் அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி படத்தின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சிக்கு மட்டுமே எட்டிப் பார்க்கும் செல்வராகவனின் நடிப்பு மிரள வைத்திருக்கிறது. இந்துஜா மற்றும் எல்லி அவரம் இருவரும் அம்மா கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தியிருந்தனர்.
க்ளைமாக்ஸ் காட்சியை போவதற்கு முன்பு காட்சிகளை இன்னும் ரசனைக்கு இழுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் இயக்குனர் செல்வராகவன். அதில் சற்று தவறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டுச்ம்.
படத்திற்கு ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் – தனுஷின் காம்போ நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் சற்று அதிகமாக பூர்த்தி செய்திருந்தால் இன்னும் சற்றும் மேல் வைத்து கொண்டாட ஏதுவாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில்
நானே வருவேன் – வெற்றி வீரன்… வாகை சூடினான்..