Spotlightசினிமாவிமர்சனங்கள்

சொப்பன சுந்தரி – விமர்சனம் 3/5

‘லாக்கப்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் ‘சொப்பன சுந்தரி’. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதைப்படி,

வெள்ளந்தி மனசு கொண்ட அம்மா (தீபா), குடித்து குடித்து பக்கவாதம் வந்துவீட்டில் இருக்கும் அப்பா, வாய் பேச முடியாத அக்கா (லக்‌ஷ்மி ப்ரியா), குடும்பத்தை கவனிக்காமல் திருமணம் செய்து கொண்டு தனிகுடித்தனம் சென்று விட்ட அண்ணன் (கருணாகரன்), இது தான் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம்.

நகைக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் ஏழ்மையானது..

நகைக் கடை கூப்பன் ஒன்றில் பரிசு விழுந்ததற்காக கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்திற்கு. இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது அந்த குடும்பம்.

அக்காவின் திருமணத்தை இந்த காரை வைத்து முடித்துவிட திட்டமிடும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்த அடியாக, கருணாகரன் அந்த காரை தனக்கு சொந்தமாக்க நினைக்கிறார்.

இதனால் இவர்களுக்குள் அடிதடி ஏற்பட, போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விடுகிறது கார் விவகாரம். வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் சுனில். ஐஸ்வர்யாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மீது தனது காமப்பார்வையை வீசுகிறார் சுனில்.

சுனில் வீசும் வலையில் சிக்காது எப்படி ஐஸ்வர்யா தப்பித்தார்.? கார் யாருக்கு சொந்தமானது.? இவர்களது குடும்பம் என்ன ஆனது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது நடிப்புத் திறமையை நன்றாகவே காண்பித்திருக்கிறார்.. சாதாரண குடும்பத்தில் பிறந்து அப்பா, அண்ணன் இல்லாமல் கூட தங்களால் வாழ முடியும் என்று அவர் பேசும் வசனங்கள், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். தனதுகண் பார்வையிலேயே பல இடங்களில் தனக்கான முத்திரை நடிப்பைக் கொடுத்து அசர வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் பெறுகிறார் லக்‌ஷ்மி ப்ரியா. அம்மாவாக கலகலப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் தீபா. பல இடங்களில் சிரிக்க வைத்து காட்சியை அழகாக நகர்த்திச் செல்ல கைகொடுத்திருக்கிறார் தீபா.

கருணாகரன், மைம் கோபி மற்றும் சுனில் என மூவரும் கதையின் முக்கியமான கதாபாத்திரத்தை சுமந்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். சின்ன காட்சி என்றாலும் அதை அளவோடு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் கிங்க்ஸ்லி.

கருணாகரனின் மனைவியாக வரும் பெண்ணின் கதாபாத்திரம் மிகவும் யதார்த்தமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.

சில இடங்களில் டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா படங்களின் வாசனை எட்டிப் பார்த்தது.. அதில் நடித்த நடிகர்கள் பலரும் இப்படத்திலும் நடித்திருப்பதாலும் வாசனை இன்னும் சற்று பலமாகவே தெரிந்தது.

மிக்ஸி, பால் பாக்கெட் இந்த இரண்டையும் வைத்து அந்த குடும்பம் எவ்வளவு ஏழ்மையில் இருக்கிறது என்று காண்பித்துவிட்ட இயக்குனர், இயக்குனராக நகர்ந்திருக்கிறார்.

கலகலப்பான திரைக்கதையை கொடுத்த இயக்குனர், கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் கொண்டிருந்திருக்கலாம்..

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அதிலும், வீட்டில் நடக்கும் கைகலப்பு சண்டைக் காட்சி செம.

\விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்தோடு பயணம் புரிய வைத்திருக்கிறது.

திரையரங்கிற்கு சென்று இரண்டு மணி நேரம், நம்மை மறந்து சிரிக்க வைக்கும் காமெடி சரவெடிக்கு “சொப்பன சுந்தரி” கேரண்டி…

Facebook Comments

Related Articles

Back to top button