
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “நெஞ்சுக்கு நீதி”. பாலிவுட்டில் ஆர்டிகல் 15 என்ற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் வெளிவந்திருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு நெஞ்சுக்கு நீதி படம் வந்துள்ளதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
கதைப்படி,
பொள்ளாச்சி அருகே ஜாதி தீண்டாமை அதிகமாகவே காணப்படும் கிராமம் ஒன்றில் கதை பயணப்படுகிறது. பள்ளி சத்துணவில் கீழ் ஜாதி பெண் ஒருவர் சமைத்த சாப்பாட்டினை உயர்ஜாதி மாணவர்கள் சாப்பிடமாட்டார்கள் என்று அந்த பெண்ணை துரத்திவிடும் அளவிற்கு கொடூர எண்ணம் கொண்ட கிராமம் அக்கிராமம்.
பொள்ளாச்சிக்கு புதிதாக ஏஸ்பி’யாக பொறுப்பேற்று அங்கு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். வெளிநாட்டில் படித்தவர் என்பதால் இந்தியாவின் இன்னமும் ஜாதி கை ஓங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார் உதயநிதி.
இவர் வந்த நேரத்தில், அங்கு 17 வயது மதிக்கத்தக்க இரு தலித் சிறுமிகள் ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குகின்றனர். மேலும், ஒரு சிறுமியை காணவில்லை. இந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்க துவங்குகிறார் விஜயராகவன் (உதயநிதி ஸ்டாலின்).
இது கெளரவ கொலை தான் என்று கூறி வழக்கை முடிக்க சொல்கின்றனர் உள்ளூர் அதிகாரிகள். அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சட்டத்தின் பக்கம் நின்று குற்றவாளிகளுக்கு உதயநிதி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா இல்லையா என்பதே இந்த ”நெஞ்சுக்கு நீதி”
உதயநிதியை கதையின் நாயகன் என்று தான் சொல்லவேண்டும். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து கதையோடு ஒன்றி பயணம் செய்திருக்கிறார். கதையோடு பயணிப்பதால் அவரின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது.
பல இடங்களில் வந்த எமோஷ்னல் காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் பாராட்டை வெகுவாக பெறுகிறார் உதயநிதி. மாஸ் காட்சிகள் எதும் இல்லாது இயல்பான நடிப்பைக் கொண்டு தனது கேரக்டரை நிவர்த்தி செய்திருக்கிறார்.
நாயகியாக தான்யா ரவிச்சந்திரன், பெரிதான காட்சிகள் எதுவும் கொடுக்கப்படாததால் இவருக்கான ஸ்கோப் படத்தில் எதுவும் இல்லாததால் சற்று வருத்தமே.
முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றி மிரட்டியிருக்கிறார் நடிகர் ஆரி. தலித் அரசியல் பேசும்போது சில இடங்களில் கைதட்டலையும் பெறுகிறார்.
ஷிவானி ராஜசேகரின் நடிப்பை வெகுவாக பாராட்டலாம். தன் தங்கையை காணவில்லை என்று பரிதவிக்கும் காட்சிகளில் நெஞ்சம் பதற வைத்திருக்கிறார் ஷிவானி.
பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி இப்படத்தின் மெயின் பில்லராக இருக்கிறார். ஜாதி வெறியராக நடித்து தனது இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். எஸ் ஐ கதாபாத்திரத்தில் நடித்த இளவரசும் தனது பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், மயில்சாமி உள்ளிட்டோரின் நடிப்பையும் வெகுவாக பாராட்டலாம்.
திபு நைனன் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். பாடல்கள் உணர்ச்சியை தூண்டும் விதமாகவும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நம்மை கதையோடு பயணம் செய்ய வைத்திருக்கிறது. தமிழரசன் பச்சைமுத்துவின் வசனங்கள் திரையரங்குகளில் விசில் சத்தம் பறக்கிறது.
தமிழகத்தில் அடிக்கடி நாம் கண்முன்னே காணும் நடக்கும் அல்லது கேள்விப்படும் பல விஷயங்களை படத்தில் இயக்குனர் வைத்திருப்பது புத்திசாலித்தனம். படத்தோடு நம்மையும் ஒன்றி பயணம் செய்ய வைத்திருப்பது இயக்குனரின் கைவண்ணம்.
இந்தியாவில் இன்னமும் ஜாதி என்ற ஒன்று ஒலித்துக் கொண்டு சிலரை காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை சிலரின் பார்வைக்கு எடுத்துக் கொண்டு செல்ல் இம்மாதிரியான படங்கள் சினிமா உலகில் தேவைப்படுகிறது.
இயக்குனர் அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் “நெஞ்சுக்கு நீதி” மனதை கனக்க வைத்து ரணம் வர வைத்திருக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி – வென்றது…