துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வா, ரகுமான், அம்மு அபிராமி, ஜான் விஜய், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் படம் தான் நிறங்கள் மூன்று திரைப்படம்.
படத்திற்கு டிஜோ ஒளிப்பதிவு செய்ய ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார்.
கருணா மூர்த்தி படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணிக்கலாம்…
மூன்று கதைகள் ஒரு ஒரு திசையில் பயணிக்க, மூன்று கதையில் ஒரு புள்ளியில் இணைகிறது. அதன்பிறகு நடக்கும் ஆட்டமே படத்தின் மீதிக் கதை…
மூன்று கதைகளில் மூன்று எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் பயணிக்கின்றனர். மூன்று கதையையும் மூன்று நிறங்களாக பிரித்துக் கொள்ளலாம்.
முதல் நிறத்தில், பள்ளி மாணவனான துஷ்யந்த சிறப்பு வகுப்பிற்குச் செல்லும் வழியில் காரில் ஒரு பெண் கடத்தப்படுவதை கண்டு அதிர்ச்சியாகி அங்கிருந்து ஓடி விடுகிறார். கடத்தப்பட்டது, தனது பள்ளி ஆசிரியரான ரகுமானின் மகள் (அம்மு அபிராமி) என்று நினைத்துக் கொள்கிறார்.
தனது நலம் விரும்பியான ரகுமான் சாருக்காக அவரது மகளை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்றெண்ணுகிறார். அதற்காக அம்மு அபிராமியை தனது நண்பர்களுடன் தேட ஆரம்பிக்கிறார்.
இரண்டாம் நிறத்தில், பெரிய இயக்குனராக ஆக வேண்டும் என்றெண்ணத்தில் தனது கதைக்கான தயாரிப்பாளரை தேடி அலைகிறார் நடிகர் அதர்வா. தயாரிப்பாளர் கிடைக்காத சோகத்தில் அவ்வப்போது உயர்தர போதை பொருளையும் எடுத்துக் கொள்கிறார்.
மேலும், தனது கதையை ஒரு மிகப்பெரும் இயக்குனர் திருடி விட்டார் என்றறிந்து போதைப் பொருளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்கிறார்.
மூன்றாம் நிறத்தில், தனது மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார் நடிகர் ரகுமான். மகளை கண்டுபிடித்துத் தருவதாக வாக்குக் கொடுக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் சரத்குமார்.
மினிஸ்டர் மகனை கைது செய்து மினிஸ்டரின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் சரத்குமார்.
இந்த மூன்று நிறங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் அதர்வா, தனக்கே உரித்தான உடல்மொழியில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். போதைப் பொருளை சற்று ஓவர் டோசேஜ் எடுத்திருக்கிறார். அதை குறைத்திருந்திருக்கலாம்.
ரகுமான் மற்றும் சரத்குமார் இருவரும் தங்களது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். துஷ்யந்தின் இளமை கதாபாத்திரம் மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தது.
வேறு வேறு பக்கம் கதை நகர்ந்து சென்று கொண்டிருந்தாலும், எந்த இடத்திலும் கதை தொய்வடையாமல் நகர்ந்து சென்று கொண்டிருந்தது.
மூன்று கதைகளையும் இணைக்கும் காட்சி படத்திற்கு மிகப்பெரும் பலம். முதல் பாதியில் வில்லனாக தென்பட்டவர்கள் இரண்டாம் பாதியில் நமது கண்ணோட்டத்தை இயக்குனர் மாற்றியிருக்கிறார்.
பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு பெரும் உதவியாக இருந்திருக்கிறது. இரவு நேர காட்சிகளை ஒளிப்பதிவு சரியான வெளிச்சத்தோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
நிறங்கள் மூன்று – எண்ணங்கள் மூன்று