விமர்சனங்கள்

நூறு கோடி வானவில் – விமர்சனம் 2.75/5

நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் ராஜ், விஜே பார்வதி உள்ளிட்டோர்.

இயக்கம்: சசி
இசை: சித்து குமார்
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ். குமார்
தயாரிப்பு: பாலாஜி கபா, அருண் அருணாச்சலம்

மும்பையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண், அந்த தொலைக்காட்சியில் இருந்து கோவாவில் இருக்கும் மற்றொரு கிளை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கிறது.  அங்கு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது சித்தி இத்னானியைச் சந்திக்கிறார்.

சித்தி இத்னானியின் காதலன் ரிச்சி விபத்தில் சிக்கி பல நாட்களாக கோமாவில் இருக்கிறார். காதலன் மீண்டும் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில், தனது அன்றாட வாழ்க்கையை வீடியோவாகப் பதிவு செய்து ரிச்சி முன்பு காண்பித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சித்தி.

ஆரம்பத்தில் ஹரிஷுக்கும் சித்திக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பின்னர் நட்பாக மாறுகின்றன. சித்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கும் ஹரிஷ், நாளடைவில் அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார்.

ஆனால் ஏற்கெனவே ஒருவரைக் காதலித்து, அவரது வருகைக்காகக் காத்திருக்கும் சித்தியால் புதிய காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் கோமாவிலிருந்து ரிச்சி மீண்டு வர, மூவரின் வாழ்க்கையிலும் எதிர்பாராத உணர்வுச் சிக்கல்கள் உருவாகின்றன.

சித்தி யாருடைய காதலை ஏற்றுக்கொள்கிறார்? ஹரிஷின் காதல் என்னவாகிறது? ரிச்சியின் வருகைக்குப் பிறகு நடக்கும் மாற்றங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹரிஷ் கல்யாண் வழக்கம்போல் காதல் கதாபாத்திரத்தில் இயல்பாகப் பொருந்தியிருக்கிறார். நகைச்சுவை கலந்த காட்சிகளிலும், காதலை வெளிப்படுத்தும் தருணங்களிலும், மனதுக்குள் ஏற்படும் ஏமாற்றங்களை வெளிக்காட்டும் இடங்களிலும் கவனம் ஈர்க்கிறார்.

சித்தி இத்னானிக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. பழைய காதலுக்கும் புதிய உறவுக்கும் இடையே முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் ராஜ் உள்ளிட்டோர் கதைக்குத் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். விஜே பார்வதியும் தனது கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்.

‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்கள் மூலம் மனித உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் சசி, இந்தப் படத்தில் காதலின் வெவ்வேறு பரிமாணங்களைப் பேச முயற்சித்திருக்கிறார்.

ஒருவருக்காகக் காத்திருக்கும் காதல், எதிர்பாராமல் உருவாகும் புதிய காதல், இரண்டுக்கும் இடையே ஏற்படும் மனப்போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஆனால் சசியின் முந்தைய படங்களில் இருந்த உணர்வுப்பூர்வமான தாக்கமும், கதைக்களத்தின் தனித்துவமும் இந்தப் படத்தில் முழுமையாக வெளிப்படவில்லை.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார் கோவாவின் அழகை வண்ணமயமாகப் பதிவு செய்திருக்கிறார். கடற்கரை மற்றும் இயற்கைச் சூழல்கள் காதல் கதைக்குப் பொருத்தமான பின்னணியாக அமைந்துள்ளன.

சித்து குமாரின் இசை படத்திற்கு முக்கிய பலமாக இருக்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் காதல் காட்சிகளின் உணர்வுகளை அழகாகக் கடத்துகின்றன.

காதல் என்பது ஒருவரை நேசிப்பது மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளையும் முடிவுகளையும் புரிந்துகொள்வதுதான் என்பதைச் சொல்ல முயற்சிக்கும் திரைப்படம் ‘நூறு கோடி வானவில்’.

நடிகர்களின் நடிப்பு, அழகான ஒளிப்பதிவு, இனிமையான இசை ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்தாலும், வழக்கமான காதல் கதையிலிருந்து வித்தியாசப்படுத்தும் திரைக்கதை இல்லாதது குறையாக இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button