
வ கெளதமனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் படையாண்ட மாவீரா. இப்படத்தின் முதன்மை ஹீரோவாக இவரே நடித்திருக்கிறார்.
படத்தில் மேலும், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்க்ஸ்லி, ஆடுகளம் நரேன், புஜிதா, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, பிரபாகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை சாம் சி எஸ் கவனித்திருக்கிறார்.
வி கே ப்ரொடக்ஷன்ஸ் படத்தினை தயாரித்திருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கதைக்குள் பயணிக்கலாம்…
வட தமிழகத்தில் வன்னிய சமுகத்திற்காக மட்டுமல்லாமல் இன்ன பிற சமுகத்திற்காகவும் தனது குரலை ஓங்கி ஒலித்தவர் காடுவெட்டியைச் சேர்ந்த குரு.
பல சமுகத்தினருக்காக பேசியவர் இவர் என்று கூறினாலும், அநேகமாக வன்னிய சமுதாய இன மக்களுக்காக போராடியவர் என்றே அறியப்பட்டவர் மறைந்த வன்னிய சமுதாய தலைவர் காடுவெட்டி குரு.
இவரின் வாழ்க்கை வரலாறை சற்று கமர்ஷியலாக எடுத்து வெளிக்கொண்டுவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த படையாண்ட மாவீரா.
காடுவெட்டி குருவாக நடித்திருப்பவர் வ கெளதமன்.
பட்டியலின மக்களுக்காக சென்று, ஆடுகளம் நரேனால் கொல்லப்பட்டவர் தான் சமுத்திரக்கனி. இவரது மகனாக வருபவர் தான் வ கெளதமன். சற்று வளர்ந்து, ஆடுகளம் நரேனை கொலை செய்கிறார் சமுத்திரக்கனியின் மகன்.
தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்பெண்களுக்கு எதிராக, அக்குற்றச் செயலை செய்தவர்களை கொலை செய்வது, மண்ணை சுரண்டும் தொழிலதிபர்களை கொல்லுவது என தொடர்ச்சியாக மண்ணுக்கும் மக்களுக்கும் யாரெல்லாம் தீங்கு இழைக்கிறார்களோ அவர்களை கொல்வதை மட்டுமே எண்ணமாக கொண்டிருக்கிறார் வ கெளதமன்.
தொடர்ந்து முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக செயல்படும் இவருக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் வ கெளதமன் மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். வீர வசனம், எரிக்கும் பார்வை, அதிரடி சண்டைக் காட்சி என மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
நாயகிக்கு படத்தில் பெரிதான ஸ்கோப் எதுவும் இல்லை என்றாலும், கொடுத்ததை அழகாக செய்து முடித்திருக்கிறார்.
படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனி, பிரபாகர், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், ரெடின் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
காட்சிகள் துண்டு துண்டாக நின்று, ஒரு கதையாக செல்லாமல் இருந்தது படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல் என்றே கூறலாம். மேலும், தொடர்ச்சியாக தனது மகன் கையில் அரிவாளைக் கொடுத்து வெட்டு, வெட்டு என்று அம்மாவான சரண்யா பொன்வண்ணன் கூறுவதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட காட்சியாகத் தான் தெரிந்தது.
பலராலும் அறியப்படாத வட மாநிலத்தை தன் கைக்குள் வைத்திருந்த ஒரு தலைவனைப் பற்றிய கதை தான் இப்படம் என்றாலும், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் ஏராளமாகவும், நாங்கள் வீரன், வீராதி வீரன் என்று காட்சிக்கு காட்சி சொல்லிக் கொண்டே இருப்பதுமென காட்சிகள் நகர்வது நம்மை சோதனைக்குள் தள்ளுகிறது.
பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும், பின்னணி இசை ஓவர் இறைச்சல் தான். ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
பல அரசியல் பேசப்பட்டாலும், அரசுக்கு எதிராக போராடுவது வேறு, வீரத்தனம் காட்டுவது வேறு என்பதை சற்று தெளிவான கதை களத்தோடு படத்தில் கூறியிருந்திருக்கலாம்.
படையாண்ட மாவீரா – வீரத்தை குறைத்திருக்கலாம்…