Spotlightவிமர்சனங்கள்

சூரரைப் போற்று விமர்சனம் 4/5

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், பரீஷ், பாலையா, பூ ராம், விவேக் பிரசன்னா என பலர் நடித்திருக்கும் படம்தான் ‘சூரரைப் போற்று’. இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா) நன்றாக படித்து விமானபடையில் பணிக்கு சேர்கிறார். ஒருகட்டத்தில் அந்த பணியை விட்டு, சொந்தமாக விமான சேவையை தொடங்க திட்டமிடுகிறார் மாறன்.

தான் தொடங்கும் விமான சேவை ஏழை, எளிய மக்கள் சென்றுவர ஏதுவாக மிக குறைந்த கட்டணமாக இருக்கும் ர்ன்று தனது திட்டத்தை வைத்து, பல முதலீடு நிறுவனத்தை நாடுகிறார் மாறன்.

அனைத்து முதலீடு நிறுவனங்களும் மாறனை விரட்டிவிடுகின்றனர். விமான சேவையில் கொடிநாட்டிய மிகப்பெரும் தொழிலதிபர் பரீஷை சந்திக்கிறார் மாறன். தனது திட்டத்தை கூறுகிறார்.

திட்டங்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டு சூழ்ச்சி செய்து மாறனை விரட்டி விடுகிறார் பரீஷ.

இறுதியாக சூழ்ச்சியை தகர்த்து தனது இமாலய கனவை, நெடுமாறன் ராஜாங்கம் எட்டினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற அந்த கதாபாத்திரத்திற்கு ஏக பொருத்தமாக பொருந்தி, கதை முழுவதையும் தனது தோளில் சுமந்து கொண்டு செல்கிறார் சூர்யா. இந்த கதாபாத்திரத்தில் சூர்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது. கோபம், காதல், வீரம் , ஆக்ரோஷம், வெறி, ஏக்கம், என அனைத்தையும் தன் கண்களால் காண்பித்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார் சூர்யா.

படத்தின் ஆரம்ப காட்சி, தன் தந்தையை காண செல்ல பணம் வேண்டும் என பயணிகளிடம் கெஞ்சும் இடம், க்ளைமாக்ஸ் காட்சி என எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு சூர்யாவின் நடிப்பு பல இடங்களில் பாராட்டும்படியாக இருக்கிறது.

வலுவான கதைக்காக 2 வருடங்கள் உழைத்த சூர்யாவிற்கு கிடைத்த தரமான வெற்றி இந்த சூரரைப் போற்று.

சூர்யாவின் ஜோடியாக அபர்ணா பாலமுரளி சரியான தேர்வு தான். முரட்டு மனிதனுக்குள் இருக்கும் காதலை காதலிக்கும் கதாபாத்திரமாக அபர்ணா பாலமுரளி நேர்த்தியாக, தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருக்க்கிறார். சாதிக்க துடிக்கும் கணவனுக்கு துணையாக மட்டுமில்லாமல் தூணாகவும் நிற்கும் மனைவியாக அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் அருமை.

கார்ப்பரேட் முதலாளியாக தனது வில்லத்தனத்தை பார்வையிலேயே மிரட்டியிருக்கிறார் வில்லன் பரீஷ்.

கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா என மூவரும் படம் முழுக்க பயணித்தாலும் ஆங்காங்கே ஸ்கோர் செய்யக்கூடிய காட்சிகளும் வைக்கப்பட்டு, அதை சிறப்பாகவும் செய்து முடித்திருக்கின்றனர்.

தந்தையை காண வரும் காட்சியில் சூர்யா – ஊர்வசியின் நடிப்பு அப்லாஷ்.

படத்தின் மற்றொரு நாயகனாக ஜி வி பிரகாஷையும் கூறலாம். இவரின் பாடல் , பின்னனி இசை என இரண்டும் கதையோடு பயணிக்க வைத்து மிரட்டியெடுத்திருக்கிறது.

நிகேத் அவர்களின் ஒளிப்பதிவு பிரம்மிப்பு.

ஒரு உண்மை கதையை கையில் எடுத்து, அதில் கமர்ஷியலையும் சற்று இணைத்து ஒரு உன்னதமான வெற்றியை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சுதா.

வெற்றிபெறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் சந்திக்கும் சோதனைகள், தடைகள் என அனைத்தையும் தாண்டி சாதனை படைப்பது எப்படி என அழுத்தமான கதை ஓட்டத்தோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

குடும்பமாக கண்டு ரசிக்கும்படியாக காட்சியமைப்பும் கட்சிதம்.

உற்சாக பெருக்காக திரையரங்குகளில் இப்படத்தை காண இயலவில்லையே என ஒவ்வொரு சூர்யா ரசிகனுக்குள்ளும் ஒரு ஏக்கம் தோன்றும்.

இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்…

சூரரைப் போற்று – போற்றுதலுக்கேற்ற படைப்பு..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close