
அடர்ந்த மலைப்பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் நிஷாந்த். சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் நிஷாந்த். அதே நேரத்தில், பல கேள்விகளுடனே சென்னையில் இருந்து அக்கிராமத்தில் பதுங்குவதற்காக அங்கு வருகிறார் விவேக் பிரசன்னா.
விவேக் பிரசன்னா மீது கொலை தாக்குதல் நடக்கிறது. தனக்கு உதவுமாறு நிஷாந்திடம் விவேக் பிரசன்னா கேட்க… விவேக் பிரசன்னாவை நிஷாந்த் காப்பாற்றினாரா இல்லையா.? விவேக் பிரசன்னாவை கொலை செய்யத் துடிக்கும் அந்த மர்ம நபர்கள் யார்.?? என்பது படத்தின் மீதிக் கதை.
நாயகன் நிஷாந்த் பெரிதான அறிமுகம் இல்லை என்றாலும், இப்படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுத்து அசத்தியிருக்கிறார். பன்றிக்கு நன்றி சொல்லி என்ற படத்திலும் தனது இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்த நிஷாந்த், இப்படத்திலும் தனது உழைப்பை கடுமையாக கொடுத்திருக்கிறார்.
விவேக் பிரசன்னா வழக்கம் போல், கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். சாகும் தருவாயில் இருக்கும் விவேக் பிரசன்னா, அதன்பிறகு எவ்வித சிகிச்சையும் எடுக்காமல் தெம்பாக நடந்து வருவது போன்ற காட்சியமைப்பை பார்க்கும் போது…”இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா டைரக்டரே” என்று தான் கேட்க தோன்றியது.
நடிகர்களின் நடிப்பு கதைக்கு தேவையானதை கொடுத்திருந்தாலும், கதை சற்று பலவீனமாக இருப்பதால் பார்க்கும் ரசிகர்கள் கதைக்குள் பயணப்பட முடியாமல் போய்விடுகிறது. அதுமட்டுமல்லாமல், க்ளைமாக்ஸ் காட்சிகளில் தெளிவான விளக்கத்தையும் இயக்குனர் கொடுக்க தவறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
அஸ்வின் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலமாக இருக்கிறது. ரெஞ்சித் அவர்களின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
கோடங்கி வடிவேலுவின் நடிப்பு பெரிதான ஈர்ப்பைக் கொடுக்காவிட்டாலும், ஓகே ரகமாக கடந்து செல்ல வைத்துள்ளார்.
கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பருந்தாகுது ஊர் குருவி பெரிதாக ஜெயித்திருக்கும். இருந்தாலும், மலையோடு ஒரு த்ரில்லிங்க் பயணம் செல்ல ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வரலாம்.