Spotlightசினிமா

யுவனின் மிரட்டலில் விரைவில் வெளிவரும் ‘பேய்பசி’!

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.

முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் முதுகெலும்பு யுவன் ஷங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர், கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.

என் தந்தை 90களில் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அதை நான் மீண்டும் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. யுவனை மிகவும் தொந்தரவு செய்து நல்ல நல்ல பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறோம். அவரும் இது என்னோட படம் என உரிமை எடுத்து எங்களுக்காக இசையமைத்து கொடுத்தார் என்றார் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர்.

பேய்பசி தலைப்பை கேட்டவுடன் இது ஹாரர் படம் என நினைத்தேன், ஆனால் இது ஒரு திரில்லர் படம். முதல் படம் ரிலீஸுக்கு முன்பே 2வது, 3வது படங்களை அறிவித்திருப்பது தயாரிப்பாளர் ஸ்ரீநிதி இந்த படத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது என்றார் காட்ரகட்டா பிரசாத்.

ஹரி என்னுடைய சகோதரன் தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம். அதன் பிறகு தனியாக முயற்சித்து ஒரு படத்தில் நடித்து விட்டான். படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்டம். அதை செய்து, விர்ச்சுவல் ரியாலிட்டி கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் என்றார் வெங்கட் பிரபு.

இயக்குனர் சீனுவும், நானும் நண்பர்கள். சினிமாவில் எனக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாக காரணம் சீனு தான். நல்ல சினிமா அறிவு உடையவர். சூது கவ்வும் படத்தில் பல விஷயங்கள் ஸ்ரீநிவாஸ் சொன்னது தான். இந்த படத்தில் பல புதுமையான, நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறேன் என்றார் இயக்குனர் நலன் குமாரசாமி.

ஹரி பாஸ்கர் என்னுடைய ஜிம் மேட். யுவன் இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்த படத்தை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். புது விஷயங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் நடிகர் ஆர்யா.

நானும் ஹரியும் இதே சத்யம் தியேட்டர்ல நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அப்போது என்னுடைய படமும் இதே தியேட்டர்ல வரணும்னு ஆசையாக சொல்வான் ஹரி. தற்போது அதே இடத்தில் இசை வெளியீடு நடக்கிறது. தான் விரும்பியதை ஹரி சாதிப்பான் என்றார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

சூது கவ்வும் படத்துக்கு இசையமைத்த காலத்தில் இருந்தே ஸ்ரீநிவாஸ் கவிநயம் எனக்கு அறிமுகம். அவருடைய குறும்படம் ஒன்றை பார்த்தேன். நல்ல திறமையாளர், அவர் படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவர் இயக்கிய படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா சார் தான் ரிலீஸ் செய்தார். இன்று அவர் படத்தின் இசை வெளியீட்டில் அவருடன் மேடையில் அமந்திருப்பது எனக்கு பெருமை என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன், அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்த படத்தில் நடித்து விட்டான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அன்புக்காக இசையமைத்திருக்கிறேன். அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியம். காசு, பணம் தாண்டி அன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும் என்றார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

நடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. என்னை இயக்குனருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பூர்ணிமாவுக்கு நன்றி. நான் உட்பட 4 பேர் புதுமுகங்களாக அறிமுகம் ஆகிறோம். எங்களை வைத்து லைவ் சவுண்டில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம். மிகப்பெரிய சாதனை அது என்றார் நாயகன் ஹரி பாஸ்கர்.

இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் மிகச்சிறந்த ஒரு மனிதர். எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் மிகவும் ஜாலியாக வேலை செய்தார். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம். யுவன் ஷங்கர் ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் கற்றது தமிழ் பாடல்களை கேட்டு மயக்கத்தில் இருந்திருக்கிறேன், அவர் படத்திலேயே நான் வேலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஒளிப்பதிவாளர் டோனி சான்.

விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தீரஜ் ரெட்டி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, தேனாண்டாள் ஹேமா ருக்மணி, எடிட்டர் மோகன் முருகதாஸ், கலை இயக்குனர் மதன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Facebook Comments

Related Articles

Back to top button