24 ஏ.எம். ஆர்.டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. பொன்ராம் இயக்கியுள்ள இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே, பொன்ராம்- சிவகார்த்திக்கேயன் – சூரி கூட்டணியில் வெளிவந்த இரண்டு படங்களும் ஹிட்டானதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.
இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 400 தியேட்டர்களில் படம் வெளியாகும் என கூறப்பட்டது. பல தியேட்டர்களில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.
தியேட்டர்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு போடப்படுவதாக இருந்த காட்சிகள் அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகார்த்திக்கேயனின் முந்தைய படமான வேலைக்காரன் வியாபாரத்தின் போது ஏற்பட்ட நிலுவைத் தொகை காரணமாகவே இப்படம் ரிலீசாகவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தலையீட்டில் ஒருவழியாக பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், பட ரிலீசில் இருந்த சிக்கல் நீங்கியது. திட்டமிட்டபடி 8 மணிக் காட்சிகள் ரிலீசாகின.