முழுக்க முழுக்க காதல்.. காதல்… காதல்….
காதல் மற்றும் காதலர்களுக்குள் நடக்கும் சில சில சண்டைகள், புரிதல்கள், பாசம், என அனைத்தையும் கலந்த ஒரு கலவை தான் இந்த ‘பியார் பிரேமா காதல்’.
படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான். படத்திற்கு அவரே தயாரிப்பாளரும் கூட.
சரி… விமர்சனத்திற்கு போயிடலாம்..
ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நாயகன் ஹரிஷ் கல்யாண், பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார்.
திடீரென்று ஒருநாள் ஹரிஷ் கல்யாண் ஆபிசிலேயே வந்து வேலைக்கு சேர்ந்து விடுகிறார் ரைசா. பழம் அதுவா வந்து பாலில் விழுந்த மாதிரி ஹரீஷுக்கு ஒரே கொண்டாட்டம்.
பின், இருவரும் நண்பர்களாகிவிடுகின்றனர். அதன் பிறகு இவர்கள் பேச்சு, பழக்கம் எல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஹரிஷ் திருமணம் என்று வந்து நிற்கின்றார். ரைஸாவோ நான் நட்பாக தான் பழகினேன், திருமணம் செட் ஆகாது என்கின்றார்.
எனக்கு கனவுகள் இருக்கிறது, திருமணம் எனக்கு செட் ஆகாது என நகர்ந்து விடுகிறார் ரைசா. பிறகு, மீண்டும் நட்பு பழக, மீண்டும் இவர்களுக்குள் வெடிக்கும் செல்லமான ஈகோ, என கதையை காதல் புத்தமாக செதுக்கி எடுத்து கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் இளன்.
ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசாவின் ஜோடிப் பொருத்தம் கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. உடலமைப்பு, ரியாக்ஷன், பொலிவு என அனைத்திலும் இருவரும் நல்ல ஸ்கோர் செய்துள்ளனர்.
ஜோடி என்றால் இப்படி ஒரு பொருத்தமாக இருக்க வேண்டும் என்று நம்மளையே திருஷ்டி சுத்தி போடும் அளவிற்கு நல்ல ஒரு ஹெமிஸ்ட்ரி.
முனீஷ்காந்த், தீப்ஸ், ரேகா, ராஜா ராணி பாண்டியன் அனைவரும் கதைக்கு தேவையான அளவிற்கு நடித்து கொடுத்திருக்கிறார்கள்… காமெடியும் படத்தில் எடுபட்டிருக்கிறது..
பின்னனி இசையில் யுவன் செம ஸ்கோர் செய்துள்ளார். பல இடங்களில் இவரது மியூசிக் படத்தை தூக்கி நிறுத்துகிறது. மேலும், 2 பாடல்கள் ரிப்பீட் மோட்..
திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ’லிவிங் – டூ – கெதர்’ நடைமுறை இந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்குமா என்பதையும் இப்படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் ஒளிப்பதிவும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, வசனங்களும் கைதட்ட வைத்திருக்கின்றன.
சண்டை, காதல் – காதல், சண்டை என ரிப்பீட்டாக வந்து கொண்டு இருப்பதால் கொஞ்சம் எரிச்சல். இரண்டாம் பாதியில் வேகம் குறைந்தது படத்திற்கு சற்று சறுக்கல்.
பியார் பிரேமா காதல் – காதலர்களுக்கான கொண்டாட்டம்….