
இயக்குனர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ராங்கி. ஆக்ஷன் திரைப்படமாக எதிர்பார்த்த இப்படம், ரசிகர்களை எந்த அளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
நாயகி த்ரிஷா ஒரு ஆன்லைன் பத்திரிகையில் ரிப்போர்ட்டராக பணிபுரிகிறார். தையல் நாயகி என்ற கதாபாத்திர பெயர் கொண்ட த்ரிஷா, எதையும் துணிச்சலாகவும், தைரியமாகவும் எதிர்கொள்பவர்.
இவரது அண்ணன் மகளாக வரக்கூடிய சிறுமியை முக வலைதளத்தில் தவறான புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒருவனை பிடிக்கிறார் த்ரிஷா. அது, தனது அண்ணன் மகள் இல்லை என்று அறிந்து கொண்ட த்ரிஷா, அவளது பெயரில் யார் பேஸ்புக்கில் அக்கெளவுண்ட் ஓபன் செய்து வைத்திருக்கிறார் என்று கண்டறிகிறார்.
இச்சமயத்தில், அது யார் என கண்டுபிடித்ததும், அந்த அக்கெளவுண்டை த்ரிஷா கையாள்கிறார். ஆபாசமாக அந்த அக்கெளண்டில் இருந்து பேசிய அனைவரையும் நேரில் வரவழைத்து எச்சரிக்கை செய்கிறார்.
அப்படியாக, அந்த அக்கெளண்டிற்கு வேறு நாட்டு சிறுவனிடம் இருந்து மெசேஜ் வர, அதற்கு பதிலளித்து பேசுகிறார் த்ரிஷா.
கடைசியாக அவன் ஒரு தீவிரவாதி என த்ரிஷாவிற்கு தெரிய வருகிறது. இறுதியாக என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
தையல் நாயகியாக நடித்து தனது கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார் தென்னாட்டு தேவதையான த்ரிஷா. எப்போதும் புன்னகையை முத்தாய் சிதற விடும் த்ரிஷாவிற்கு, இக்கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது தான்.
போல்டாக நின்று எதையும் எதிர்க்கக் கூடிய ராங்கித்தனமாக இருக்கக் கூடிய கதாத்திரத்தில் நின்று வென்று காட்டியிருக்கிறார் த்ரிஷா. அதிலும், ஆக்ஷன் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
தனி ஒரு ஆளாக ஒட்டுமொத்த கதையையும் நகர்த்திச் சென்றிருக்கிறார் த்ரிஷா.
தீவிரவாதியுடனான காதலை மிகவும் மென்மையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். இருந்தாலும், இந்திய மக்களின் மனம் புண்படும்படியான ஒரு சில வசனங்களை தாராளமாகவே தவிர்த்திருந்திருக்கலாம்.
அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு அடுத்தடுத்து காட்சிகளை நகர்த்தியிருப்பது இயக்குனரின் பலம். ஒருகுறிப்பிட்ட மதத்தினைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தீவிரவாதிகளாக காட்டும் சித்திரம் என்று தான் மாறுமோ.?
படத்தில் நடித்திருந்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். லாஜிக் ஓட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக எட்டிப் பார்த்தாலும், கதையின் நகர்வு அதை சமாளித்துவிட்டுச் செல்கிறது.
சத்யாவின் இசையில் பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகளுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. சக்தியின் ஒளிப்பதிவு க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
ராங்கி – துணிவானவள்