
எழுத்து & இயக்கம்: விஜய் ரங்கநாதன்
நடிகர்கள் : நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம்.
தயாரிப்பாளர்கள்: வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல்
தயாரிப்பு நிறுவனங்கள்: ஆன்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ்
இசை: வைசாக் சோமநாத்
ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன்
படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன்
கதைப்படி,
படத்தின் ஆரம்பத்தில் அர்ஜுன் இறந்து விடுவது போன்று காட்சிப்படுத்தப்பட, அதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கதை நகர்கிறது.
அர்ஜுன் (அதுல்), கெளரி (நிவேதிதா சதிஷ்) இருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து. வைக்கின்றனர்… வேலையை இழந்து அர்ஜுன் மனக்கவலையில் இருக்க, அமைதிக்காக இருவரும் கொடைக்கானல் வருகின்றனர்.
கெளரியின் அப்பா கெஸ்ட் ஹவுஸில் வேலைக்காரராக இருக்கிறார் சகாயம்( நாசர்). வண்ணத்துப்பூச்சி வளர்ப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் சகாயம்.
தனக்கு எக்ஸ் காதல் ஒன்று இருந்ததை அர்ஜுனிடம் கூற நினைக்கிறார் கௌரி. இந்த நிலையில் தன்னுடைய கல்லூரி நண்பர் என்று கூறி சூர்யா(சிபி சந்திரன்)வை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அர்ஜுன். சூர்யா தான் கௌரியின் முன்னாள் காதலன்.
சூர்யாவை நேரில் கண்டதும் அதிர்ச்சியாகிறார் கௌரி. இந்த சூழலில் சிறு நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும் தொழில் நடத்தி வருவதாக சூர்யா அர்ஜுனிடம் கூற, நிறுவனம் தொடங்க முதலீடு தேவைப்படுவதால் சூர்யாவை அதற்கு பயன்படுத்திக் கொள்ள அர்ஜுன் திட்டமிடுகிறார்.
இந்த ட்ராவலில் அர்ஜூன் எப்படி இறந்தார்.?? கீதா கைலாசம் சொன்ன ஜோசியம் எப்படி பழித்தது.?? கெளரி – சூர்யா காதல் என்னவானது.???உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அதுல். தொழில் ரீதியாக தன்னால் இன்னமும் சாதிக்க முடியவில்லை, எதையும் தன்னால் முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஒரு கதாபாத்திரமாக அக்கதாபாத்திரத்தில் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வாழ்ந்திருந்தார் அதுல்.
கெளரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவேதிதா சதீஷ். இல்லற வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாமலும் தனது எக்ஸ் காதலனை மறக்க முடியாமலும் மனதளவில் சிக்கித் தவிக்கும் ஒரு கதாபாத்திரமாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து அக்கதாபாத்திரத்தில் ஜொலித்திருந்தார் நிவேதிதா.
சூர்யா என்ற கதாபாத்திரத்தில் சிபி சந்திரன் நடித்திருந்தார். எதையும் அசால்ட்டாக எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரமான சூர்யா கேரக்டருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தார் சிபி சந்திரன். நிவேதிதா மீது வைத்திருந்த ஒரு விதமான காதல்.? கல்லூரியில் ஒரு பெண்ணுடனான தொடர்பு.? க்ளைமாக்ஸில் சிபி எடுத்த முடிவு என மேலோட்டமாக தனது கதாபாத்திரத்தை கடத்தி கொண்டு சென்றிருக்கிறார் சிபி. கீதா கைலாசம் ஒரு டயலாக் ஒன்றை சிபியை பார்த்து கூறுவார் ”தாமரை இலையில் இருக்கும் நீர் போல தான் ஒட்டாமல் இருப்பாய் நீ” என்று. அதுதான் சிபியின் கதாபாத்திரம் இந்த படத்தில்…
வண்ணத்துப்பூச்சி மீது அலாதி பிரியம் வைத்திருக்கும் நாசரின் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. சிபியுடன் பேசும் போது அவர் பேசும் வசனங்கள் மனதை கல்லாக்கிவிடுகிறது.
ஒரு சில காட்சிகள் என்றாலும் மிகவும் தெளிவான ஒரு நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கீதா கைலாசம்.
பாடல்களும் பின்னணி இசையும் படத்தில் மிகப்பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது. கதையோடு சேர்ந்து பின்னணி இசையும் பயணப்பட்டு நம்மை அக்கதையோடு பயணமாகும்படி வைத்துவிடுகிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். அதிலும் க்ளைமாக்ஸில் பந்து ஒன்று செல்லும் காட்சியை படமாக்கிய விதம் அப்லாஷ் தான்.
வீட்டில் வரையப்பட்ட பாம்பு படம், வண்ணத்துப்பூச்சி பறந்து செல்வதை காட்சிப்படுத்தியது, அதே வண்ணத்துப்பூச்சி கரண்ட் கம்பியில் அடிபடுவது என ரசிக்க வைக்கும் காட்சிகள் படத்தில் ஏராளம்.
ஆரம்பத்தில் கதை எங்கேயோ போகுதே என்று யோசிக்க வைத்தாலும், காட்சிகள் நகர நகர நம்மை படத்திற்குள் அழைத்துச் சென்று விட்டார் இயக்குனர். ஒரு மெல்லிய நாட் என்றாலும் அதை இயக்குனர் கையாண்ட விதம் மிகவும் அழகு.
சிபிக்கும் நிவேதிதாவிற்கும் இருக்கும் காதலானது அதுல் அவர்களுக்கு தெரிய வரும்போது நடக்கும் கலந்துரையாடல் படத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறது. ஓ பட்டர்ப்ளை என்று படத்திற்கு பெயர் வைத்ததற்கு க்ளைமாக்ஸில் ஒரு தரமான காட்சியும் வைக்கப்பட்டிருக்கிறது.
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று படத்தைப் பார்த்தால், நம் எண்ணங்களை கிறங்கடித்து நம்மை படத்திற்குள் இழுத்துச் செல்லும் ஒரு மாயாஜாலத்தை இயக்குனர் நிகழ்த்தியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். கையில் போனை எடுக்காமல் இரண்டு மணி நேரம் படத்தை ரசித்துவிட்டு வெளியே வந்தால் நம்முள் ஆயிரம் கேள்விகளை இப்படம் கேட்க வைக்கும்.





