
இயக்குனர் ஃபெலினி இயக்கத்தில் அரவிந்த்சாமி, குஞ்சாகோ போபன், ஜாக்கி ஷெராஃப், ஈஷா ரெஃபா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட உயர் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ரெண்டகம்”.
கதைப்படி,
கதையின் நாயகனாக வரும் குஞ்சாகோ போபன், தனது காதலியுடன் மும்பையில் வசித்து வருகிறார். ஸ்வீடன் நாட்டிற்கு தனது காதலியுடன் செல்ல முடிவெடுக்கிறார். அதற்கு பணம் தேவைப்படுகிறது.
அச்சமயத்தில், மிகப்பெரும் கும்பல் ஒன்றிடம் இருந்து போபனுக்கு அழைப்பு வருகிறது. தங்களது 30 கிலோ தங்கம் ஒரு விபத்தில் தவறிவிட, அது எங்கு சென்றது என்பது அரவிந்த் சாமிக்கு மட்டும் தான் தெரியும் என்கிறது அந்த குழு.
பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்துவிட்ட அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அந்த தங்கம் எங்கிருக்கிறது என்று அவரிடம் விசாரித்து கூறுமாறு போபனுக்கு அழைப்பு விடுகிறது அந்த பணக்கார கும்பல்.
அப்படி செய்தால் ஸ்வீடனுக்கு செல்ல ஆகும் செலவை தருவதாக கூறுகிறது அக்கும்பல்.
ஓகே எனக்கூறி, அரவிந்த்சாமியிடம் நட்பாக பழகி பழைய நினைவை போபன் கொண்டுவந்தாரா.? இல்லையா.? அரவிந்த்சாமி யார்.? போபன் யார்.? என்ற கேள்விக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்து கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து செல்லும் திரைக்கதை, இடைவேளையில் டாப் கியர் போட்டு அடுத்தகட்டத்திற்குச் செல்கிறது. அதன் பிறகு ஆரம்பமாகும் கதை பயங்கர வேகம் எடுத்து, அடுத்தடுத்து ட்விஸ்ட் காட்சிகள் மட்டுமல்லாமல், மேக்கிங்கிலும் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறது ரெண்டகம்.
சண்டைக்காட்சியில் ஆரம்பித்து ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்திலும் தங்களது மெனக்கெடலை கொடுத்து பிரம்மிக்க வைத்திருக்கிறது படக்குழு.
படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு பெரிதான இடம் வைத்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது.
தமிழ் சினிமாவிற்கு அவ்வப்போது வரும் நல்ல படங்களின் வரிசையில் இந்த ரெண்டகம் படமும் நிச்சயம் இணைந்திருக்கிறது என்று கூறலாம்.
அரவிந்த் சாமியின் நடிப்பாக இருக்கட்டும், குஞ்சாகோ போபன் இருக்கட்டும் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். அதிலும், இரண்டாம் பாதியில் இருவரின் நடிப்பும் பிரம்மிக்க வைத்திருக்கிறது.