
இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் “ராக்கெட்ரி”. இப்படத்தினை எழுதி இயக்கி நம்பி நாராயணனாக நடித்தவர் மாதவன். மிகப்பெரும் பொருட்செலவில், மாதவனின் அயராத முயற்சியால் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் மக்களை எந்த வரை ஈர்த்திருக்கிறது என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்.
கதைப்படி,
நாயகன் மாதவன் கல்லூரி படிப்பை முடித்து, விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தனது முயற்சியை செய்து வருகிறார். இவரின் முயற்சியால் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு எட்டுகிறது. அங்கு அவரின் அறிவைக் கொண்டு வியந்த அமெரிக்கர்கள், கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறோம், நீங்கள் நாசாவில் பணியாற்றும்படி அழைப்பு விடுக்கின்றனர்.,
அதை நிராகரித்து, இந்தியாவிற்காக மட்டுமே எனது அர்ப்பணிப்பு என்று இந்தியாவிற்கு வந்துவிடுகிறார் மாதவன். இஸ்ரோவில் பணியாற்றுகிறார். இந்நிலையில், ரஷ்யாவிற்கு சென்று ராக்கெட் எஞ்சினின் முக்கியமான சில பகுதிகளை அங்கு டதயார் செய்கிறார்.
அந்த முக்கியமான பகுதிகளை இந்தியாவிற்கு கஷ்டப்பட்டு கொண்டுவந்த வேளையில், மாதவன் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்படுகிறது.
மாதவன் மீது எதற்காக தேசத்துரோக வழக்கு பாய்ந்தது.? யாரால் இந்த சதிச் செயல் தீட்டப்பட்டது.? குறைந்த செலவில் விண்ணில் ராக்கெட் ஏவும் மாதவனின் கனவு நினைவானதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
நம்பி நாராயணனாக படம் முழுவதும் வாழ்ந்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் மாதவன். தனது முழு உள்ளம் உழைப்பு முதல் உடல் உழைப்பு வரை அனைத்தையும் செலவழித்து ஒரு காவியமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார் மாதவன். முதல் காட்சியிலேயே நம்மை கவர்ந்து படத்திற்குள் நம்மை இழுத்துச் செல்கிறார் மாதவன்.
மாதவனின் மனைவியாக நடித்த சிம்ரனும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
மாதவனை, போலீஸார் அடித்து இழுத்துச் செல்லும் காட்சி, தான்மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்ததால், தனது மனைவியை அழைத்துச் செல்ல ஆட்டோ கூட கிடைக்காமல் தவிக்கும் காட்சி, நண்பனின் குழந்தை இறந்த போது அதை நண்பனிடம் கூறாமல் மறைத்த காட்சி, பித்து பிடித்த தனது மனைவியைக் கண்டு கண்கலங்கிய காட்சி, தன் மீது எந்த குற்றமும் இல்லை, நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு வந்த மகிழ்ச்சியான தருணத்தின் காட்சி என காட்சிக்கு காட்சி கண்களை குளமாக்கிவிட்டுச் செல்கிறார் மாதவன்.
கதை நகர்வு, காட்சியமைப்பு, திரைக்கதை என அனைத்தையும் நேர்த்தியாக செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் நம்பி நாரயணனையே அழைத்து காட்சிப்படுத்தியது மனதில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ராக்கெட் பற்றிய பல விஷயங்கள் நாம் அறியாததால், முதல் பாதி சற்று போரடிப்பது போன்ற உணர்வு ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. அதை அனைத்தையும் இரண்டாம் பாதியில் தவுடுபொடியாக்கியிருக்கிறார் மாதவன்.
முதல் பாதியில் சற்று தடுமாறும் நகர்வு, இரண்டாம் பாதியில் வேகம் கொண்டு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. ஒரு உண்மையான, நேர்மையான, தேச பக்தி கொண்ட விஞ்ஞானியை தூற்றியது எப்படியான கொடூரம் என்பதையும் கண்முன்னே கொண்டு வந்து நம்மை கண்கலங்க வைத்து விட்டது இந்த “ராக்கெட்ரி”.
சிர்ஷா ரே’வின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.. ராக்கெட்டை பல கோணங்களில் காண்பித்து நம்மை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
சாம் சி எஸ் அவர்களின் இசையில் பின்னணி இசை கதையோடு சென்று நம் மனதை பெரிதாக வருடியிருக்கிறது. பின்னணி இசையில் மீண்டும் ஒரு ஹிட் கொடுத்திருக்கிறார் சாம்.
சிறப்பு தோற்றத்தில் தோன்றிய சூர்யா, அளவுக்கு மீறி நடித்தது போன்ற ஒரு உணர்வு.. சற்று குறைத்திருந்தால் ஈர்த்திருந்திருப்பார். க்ளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார் சூர்யா.
ஏனைய கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்திற்கு பலமாகவே அமைந்திருந்தன.
ராக்கெட்ரி – ஓவியத்தை காவியமாக கொடுத்த மாதவன்..
கொண்டாடப்பட வேண்டிய படைப்பு…