Spotlightவிளையாட்டு

வரி ஏய்ப்பில் சிக்கிய ரொனால்டோ: 110 கோடி அபராதம், 2 வருட ஜெயில்!!

ஸ்பெயின் நாட்டில், தன் மீது நிலுவையில் இருந்த வரி ஏய்ப்பு வழக்கை முடிக்கும் வகையில், இரண்டு வருட ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 110 கோடி அபராதம் ஆகியவற்றை ஏற்பதாக ஒப்புக்கொண்டுள்ளார் கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த முன்னணி வீரர் ரொனால்டோ, பெரும் பணம் ஈட்டினார். ஆனால் ஸ்பெயின் நாட்டின் கடுமையான வரி சட்டங்களால், வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிக்கொண்டார்.

அந்த வழக்கில், ரொனால்டோ 2011-14-க்கு இடையில் தன் “இமேஜ்” மூலமாக கிடைத்த வருமானத்தில் சுமார் 12.8 மில்லியன் பவுண்டுகள் வரி கட்டவில்லை என குற்றம் சாற்றப்பட்டது. அந்த வழக்கை முடிக்கும் வகையில் தற்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட ரொனால்டோ, அதற்கு தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 12.1 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 110 கோடி) அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டார்.

சிறை தண்டனையை பொறுத்தவரை, ஸ்பெயின் நாட்டில் நிர்வாக ரீதியிலான குற்றங்களுக்கு, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான தண்டனை இருந்தால், அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதன்படி, ரொனால்டோ நன்னடத்தை அடிப்படையில், சிறைக்குப் போவதிலிருந்து தப்பி, சுதந்திரமாக இருக்கலாம்.

அபராதத் தொகை 12.1 மில்லியன் பவுண்டுகள் மட்டுமல்லாமல், மேலும் சுமார் 4.7 மில்லியன் பவுண்டுகள் வழக்கு செலவுகள் மற்றும் பிற அபராதங்களுக்கு செலுத்த வேண்டும். இவை அனைத்தையும், ஒப்புக்கொண்ட ரொனால்டோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரது இந்த முடிவின் பின்னணி பற்றிய சில தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ரொனால்டோ, உலகக்கோப்பை போட்டிகள் முடிந்த உடன் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து, இத்தாலியின் ஜுவெண்டஸ் அணிக்கு தாவினார். ரியல் மாட்ரிட், பார்சிலனோ, மான்செஸ்டர் போன்ற பணக்கார கிளப் அணிகள் போல அல்லாமல், ஜுவெண்டஸ் ஒரு சாதாரண கிளப் அணி. ரொனால்டோ, பணத்தை வாரி இறைத்த ரியல் மாட்ரிட் மற்றும் ஸ்பெயினை விட்டு, சாதாரண அணிக்கு ஏன் செல்கிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

ஸ்பெயினின் கடுமையான வரி மற்றும் வழக்குகளால் வெறுப்பான ரொனால்டோ, ஜுவெண்டஸ் கிளப்புக்கு மாறியுள்ளார் என தெரிகிறது. இந்த வழக்கை முடித்த கையோடு, ஸ்பெயினில் தான் செய்திருந்த அனைத்து முதலீடுகளையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இத்தாலியில் குறைவான வரிகள் மூலம், அவர் ஸ்பெயினை விட அதிகம் பணம் ஈட்டுவார், என சிலர் கூறி வருகிறார்கள்.

-MyKhel

Facebook Comments

Related Articles

Back to top button