
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அதிசயப் பிறவி’ (Athisaya Piravi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் K7 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே. கணேஷ் மற்றும் விஜய் கே. செல்லையா தயாரிக்கின்றனர்.
‘One Loop. Infinite Possibilities’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைம் லூப் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் பின்னணியிலான வித்தியாசமான கதைக்களத்தை உணர்த்துகிறது. காலச்சுழலில் சிக்கியிருப்பது போன்ற சந்தானத்தின் தோற்றமும், பிரம்மாண்டமான சுழல் பின்னணியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
இப்படத்தில் கோபிகா ரமேஷ், வெற்றி, ஸ்மிருதி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
காமெடி படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சந்தானம், தற்போது வித்தியாசமான டைம் லூப் கதைக்களத்தில் களமிறங்குவது ‘அதிசயப் பிறவி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.





