
தென் மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கிய தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் முதன் முறையாக இணைந்து இசையமைத்திருக்கும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது.
தமிழகம் மற்றும் கேராளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிடுகிறார்.
கதைப்படி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பண்ணைபுரத்தில் ஆட்டோ ஓட்டி தனது வாழ்க்கையை நடத்தி வருபவர் விஜய் சேதுபதி. நாயகியான காயத்ரியை காதல் செய்து திருமணம் செய்து கொள்கிறார் விஜய்சேதுபதி.
இரு குழந்தைகளுடன் தனது சொந்த வீட்டில் ஏழ்மையான வாழ்க்கையாக இருந்தாலும் அதை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் விஜய் சேதுபதியும் காயத்ரியும்.
இந்நிலையில், தனது குடும்ப கஷ்டத்தையும் அரசு பள்ளிகளில் படிக்கும் தனது குழந்தைகளை கான்வென்ட்’ல் சேர்க்கவும் தனது ஆட்டோ தொழிலை விட்டு, ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் பணியில் இறங்குகிறார் விஜய் சேதுபதி.
உள்ளூர்காரர்கள் அனைவரும் விஜய் சேதுபதியை நம்பி, இடம் வாங்க அட்வான்ஸ் கொடுக்கின்றனர். அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொண்டு இடத்தின் ஓனர் ஓட்டம் பிடித்து விட, விஜய் சேதுபதி இதில் சிக்கிக் கொள்கிறார்.
போலீஸ் விஜய் சேதுபதியை தேட, குடும்பத்தை விட்டு கேரளாவிற்கு தப்பியோடுகிறார். இறுதியில் விஜய் சேதுபதி என்ன ஆனார்.? அவரின் குடும்பம் என்னவானது.? மாமனிதனாக வாழ்ந்தது யார் என்ற கேள்விக்கெல்லாம் இரண்டாம் பாதியில் பதில் கூறியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
நாயகன் விஜய் சேதுபதி கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். பதட்டம், பாசம், காதல், என அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். சமீபகாலங்களில் வெளியாகும் படங்களில் விஜய் சேதுபதியிடம் எட்டிப் பார்க்கும் அந்த “ஓவர் ஆக்டிங்”கை அறவே குறைக்க வேண்டும். பல இடங்களில் அது காட்சிக்கு பெரிதும் சோர்வை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த காயத்ரிக்கு முதற்கண் பாராட்டுக்கள். திருமணம் முதல் தனது மகன் படித்து வேலைக்குச் செல்லும் காட்சி வரையிலான நடிப்பில் பெரிதான கவனம் ஈர்த்திருக்கிறார் காயத்ரி.
நண்பனாக நடித்திருந்த குரு சோமசுந்தரத்தின் நடிப்பு கவனம் ஈர்த்திருந்தது. அனிகா சுரேந்திரன், ஷாஜி, ஜுவல் மேரி, ஷாஜி, மறைந்த மூத்த நடிகை லலிதா உள்ளிட்ட இவர்களின் கதாபாத்திரம், கதையின் ஓட்டத்தில் குறையில்லாமல் எட்டிப் பார்த்துச் சென்றது.
இளையராஜா & யுவனின் இசையில் பாடல்கள் ஏதும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பின்னணி இசை மனதை வருட வைத்திருக்கிறது.
குடும்பத்தைத் தாங்கும் ஒவ்வொரு மனிதனும் மாமனிதன் தான் என்று கூறிய இக்கதையில், திரைக்கதையின் ஓட்டத்தில் சற்று சுவாரஸ்யம் ஏற்றியிருந்தால் இன்னும் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.
ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் விஜய் சேதுபதியின் ஓவர் ஆக்டிங்க், படத்திற்கு சற்று சறுக்கல் தான். வழக்கமான குடும்ப பாங்கான படமாகவே இப்படத்தையும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. கதை மிகப்பெரும் வலுவாக இருந்தாலும் திரைக்கதை வலு இல்லாமல் இருப்பது பலவீனம் தான்.
சுகுமாரின் ஒளிப்பதிவு கேரளாவை மிக அழகாக காட்டியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு ஷார்ப்பாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் குடும்பங்களின் மேன்மையை பேசும் படங்கள் வருவதே அரிது. அப்படியாக, அவ்வப்போது காவியமாக வெளிவரும் மாமனிதன் போன்ற படங்களை நிச்சயம் கொண்டாடிதான் ஆக வேண்டும்.
மாமனிதன் – போற்றக்கூடியவன்.