Spotlightசினிமா

சிவகார்த்திகேயனின் ‘SK27’ படப்பிடிப்பு தொடங்கியது – ‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘SK27’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

‘SK27’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் – கயாது லோகர் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

மேலும், ‘பரிதாபங்கள்’ மூலம் பிரபலமான சுதாகர் மற்றும் நடிகர் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், ‘SK27’ படத்தை எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயனும் ராம் குமார் பாலகிருஷ்ணனும் இணையும் முதல் திரைப்படம் என்பதால் இந்தக் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

ஒரு எளிமையான பிரச்சினையை மையமாக வைத்து அழுத்தமான மோதல்களுடன் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருந்த ராம் குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை வைத்து எப்படிப்பட்ட கதையை உருவாக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

படத்தின் அறிவிப்பு போஸ்டரும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மையத்தில் சிவப்பு நிற கார் இடம்பெற்றிருக்க, அதைச் சுற்றி மிகப்பெரிய மக்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

புகை, வெளிச்சம், மக்கள் கூட்டம் என சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு நிறங்களின் கலவையில் உருவாக்கப்பட்டிருக்கும் போஸ்டர் பரபரப்பான சூழலை வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக காரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கதை நகருமா அல்லது ஆக்‌ஷன் பின்னணியில் ‘SK27’ உருவாகிறதா என்ற ஆர்வத்தையும் அறிவிப்பு போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் படத்தின் கதைக்களம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக விரிவான தகவல்களை வெளியிடவில்லை.

படத்தின் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் மேற்கொள்கிறார். கலைவாணன் படத்தொகுப்பாளராகவும், ராஜேஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். ஆடை வடிவமைப்பை பிரவீன் கவனிக்க, ஸ்டீவன் குமார் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் நடிப்பில், ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘SK27’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button