
விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என்றாலே கிரிக்கெட், கபடி போன்ற போட்டிகளை மையப்படுத்தி பரபரப்பான காட்சிகளை உருவாக்குவது வழக்கம். ஆனால், சதுரங்கத்தை மையமாக வைத்து சமூக ஏற்றத்தாழ்வுகளையும் ஒரு சிறுவனின் கனவையும் இணைத்து சொல்ல முயன்றிருக்கிறது ‘கிராண்ட் மாஸ்டர்’.
துப்புரவுத் தொழிலாளியான அபர்ணதியின் மகன் அஸ்வினுக்கு சிறு வயதில் இருந்தே செஸ் விளையாட்டின் மீது தீராத ஆர்வம். சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்று ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்பதே அவனுடைய மிகப்பெரிய கனவு.
ஆனால் அவனது சமூகப் பின்னணி காரணமாக பள்ளி தொடங்கி பல இடங்களிலும் அவன் ஒதுக்கப்படுகிறான். படிப்பதற்காக பள்ளிக்குச் செல்லும் மாணவனை, அவனது அம்மா செய்யும் துப்புரவுப் பணியை செய்யச் சொல்லி ஆசிரியரே வற்புறுத்தும் காட்சிகள் அவன் எதிர்கொள்ளும் பாகுபாட்டை அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.
இத்தனை தடைகளையும் தாண்டி அந்தச் சிறுவனால் தனது செஸ் கனவை அடைய முடிந்ததா? சர்வதேச போட்டியில் வெற்றி பெற முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பொதுவாக செஸ் போட்டியை சினிமாவில் விறுவிறுப்பாகக் காட்டுவது சவாலான விஷயம். அதை உணர்ந்த இயக்குநர் வெற்றி செழியன், செஸ் போட்டி நடக்கும் தருணங்களோடு வெளியில் நடக்கும் பல பரபரப்பான சம்பவங்களையும் இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். இதனால் கிளைமாக்ஸை நோக்கி படம் செல்லச் செல்ல வேகம் அதிகரிக்கிறது.
துப்புரவுத் தொழிலாளியாக நடித்திருக்கும் அபர்ணதி, படத்தின் முக்கிய பலம். தனது மகனை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரு தாயின் தவிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். துப்புரவுப் பணிகள் தொடர்பான காட்சிகளிலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் கதாபாத்திரத்திற்குள் இறங்கி நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
அவரது மகனாக வரும் அஸ்வினும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சுற்றியிருப்பவர்கள் தன்னை ஒதுக்கினாலும், தனது கனவை மட்டும் விட்டுக்கொடுக்காமல் செஸ் போர்டை நோக்கி நகரும் சிறுவனாக கவனம் ஈர்க்கிறார்.
தன் மகன் வக்கீலாக வேண்டும் என்பது தாயின் ஆசை. ஆனால், தான் ஒரு ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்பது மகனின் கனவு. இந்த இரண்டுக்கும் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் படத்திற்கு உயிரோட்டத்தைக் கொடுக்கின்றன.
அதிலும் சாதாரண துப்புரவுத் தொழிலாளியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அபர்ணதி, ஒரு காலத்தில் மிகச்சிறந்த சதுரங்க வீராங்கனையாக இருந்தவர் என்ற உண்மை வெளிவரும் இடம் கதையின் முக்கியமான திருப்பமாக அமைந்திருக்கிறது.
அபர்ணதியின் கணவராக லிங்கேஷ் நடித்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் அபர்ணதி – லிங்கேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் வலிமையான உணர்ச்சிப்பூர்வமான பகுதிகளில் ஒன்றாக அமைந்திருக்கின்றன. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வில்லனாக வரும் சுரேஷ் மேனன், சிறுவன் செஸ் போட்டியில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக செய்யும் வேலைகள் கதையின் மோதலை அதிகரிக்கின்றன. குறிப்பாக சிறுவனின் உயிரையே பறிக்க முயலும் அளவுக்குச் செல்லும்போது அவரது கதாபாத்திரத்தின் மீது கோபம் ஏற்படுகிறது.
வெற்றி செழியன், தமிழரசி, அன்பு உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஆண்டனியின் இசை உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஒளிப்பதிவு, கதையின் இருவேறு உலகங்களையும் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. குறிப்பாக குடிசைப் பகுதியின் வாழ்க்கையையும் அதற்கு முற்றிலும் மாறான மற்றொரு சமூகத்தின் வாழ்க்கையையும் காட்சிகளின் வழியாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றி செழியன், படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் பாகுபாடு, அதிலிருந்து மேலே வரத் துடிக்கும் ஒரு சிறுவனின் கனவு என சமூகப் பிரச்சினையையும் விளையாட்டையும் ஒரே கதைக்குள் இணைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் சில இடங்களில் வில்லத்தனம் சற்று அதிகப்படியான சினிமாத்தனத்துடன் நகர்வதைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக வில்லனுக்கும் கதையின் பிரதான கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மோதல்களை இன்னும் இயல்பாகவும் நுட்பமாகவும் அமைத்திருந்தால் படத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திருக்கும்.
இருப்பினும், வழக்கமான விளையாட்டுப் படங்களிலிருந்து விலகி சதுரங்கத்தை மையமாக வைத்து, சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு சிறுவனின் கனவுப் போராட்டத்தைப் பேச முயன்ற விதத்தில் ‘கிராண்ட் மாஸ்டர்’ கவனம் ஈர்க்கிறது.
மொத்தத்தில் – தடைகளைத் தாண்டி கனவை நோக்கி நகரும் ஒரு சிறுவனின் சதுரங்கப் போராட்டம் இந்த ‘கிராண்ட் மாஸ்டர்’.





