
தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த பழம்பெரும் நடிகர் சிவக்குமார், இன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமைக்குரிய சிவக்குமார், திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.
1965ஆம் ஆண்டு ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கிய ‘காக்கும் கரங்கள்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவக்குமார், தொடர்ந்து ‘கந்தன் கருணை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி, ராதிகாவுடன் இணைந்து நடித்த ‘சித்தி’ தொலைக்காட்சித் தொடரிலும் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
நடிப்பைத் தாண்டி சிறந்த ஓவியர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளராகவும் சிவக்குமார் திகழ்கிறார். குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் தொடர்பான இவரது சொற்பொழிவுகள் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் பின்னணிப் பாடகி பிருந்தா ஆகியோரின் தந்தையான சிவக்குமார், திரையுலகிலும் குடும்ப வாழ்க்கையிலும் தனக்கென சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ள நடிகர் சிவக்குமாருக்கு, அவரது பிறந்தநாளில் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.





