
பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனரான இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போகன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், பாண்டியன், உள்ளிட்ட நட்சத்திங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ஸ்டார்”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எழில் அரசு. இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
Rise east entertainment & sri venkateswara cine chitra சார்பில் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
லால் மகனாக வருகிறார் கவின். சிறுவயதில் இருந்தே சினிமாவில் எதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வாழ்ந்து வருகிறார் கவின். தனது மகனின் ஆசையை நிறைவேற்ற துடிக்கிறார் லால்.

மகனின் ஆசையை விட, அவனது வாழ்க்கை முக்கியம் அதற்காக நன்றாக படித்து, நல்ல சம்பளத்தில் ஒரு வேலை பார்க்க வேண்டும் எண்ணும் தாயாக வருகிறார் கீதா கைலாசம்.
தனது சினிமா கனவை நோக்கி ஓடும் நேரத்தில், கவினுக்கு காதல் முளைக்கிறது. காதல் ஒருபக்கம் இருந்தாலும், சினிமாவின் கனவு அவரை துரத்த மும்பையில் மிகப்பெரும் சினிமா பயிற்சியாளரிடம் சென்று நடிப்பைக் கற்றுக் கொள்கிறார்.
அதன்பிறகு, அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அச்சமயத்தில், விபத்து ஏற்பட்டு கவினின் முகத்தில் காயம் ஏற்பட சினிமா கனவானது நனவாகவே போனது.
அதன்பிறகு கவினின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் கவின், கலை என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். கலை கதாபாத்திரமாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார். ஒரு சில இடத்தில் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்த்தாலும், கதைக்கு தேவையான நடிப்பை ஆங்காங்கே கொடுக்க தவறவில்லை. க்ளைமாக்ஸ் காட்சி அதிகமாகவே ரசிக்க வைத்தாலும், அதில் வைத்த ட்விஸ்ட் காட்சியை சற்று தவிர்த்திருந்திருக்கலாம்.

ஹீரோயின்களாக நடித்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஹீரோ எழும் போது ஒரு ஹீரோயினும், ஹீரோ தடுமாறும் போது தூக்கி விடும் கை மற்றொரு ஹீரோயினுமாக வருகிறார்கள். வழக்கமான தமிழ் சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் தான் இருவரோடதும் ..
லால் மற்றும் கீதா கைலாசத்தின் நடிப்பு மெச்சும்படியாக இருந்தது படத்திற்கு பலம்.
ஓரிரு இடங்களில் வசனங்கள் கவனம் பெற்றன. கதையின் மூலக்கருவை சுமந்து சென்ற படமானது, நடுவில் சற்று தடுமாறி தடம் மாறி சென்றதையும் காண முடிந்தது.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிதளவில் ஒத்துழைக்காதது சற்று ஏமாற்றம் தான். மிகப்பெரும் ஆறுதலாகவும் மிகப்பெரும் தூணாகவும் வந்து நின்றது ஒளிப்பதிவு மட்டுமே.
ஸ்டார் – 3.25 ஸ்டார் தான்..





