Spotlightதமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் – தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

மக்கள் கூட்டமைப்பு, வணிகர் சங்கம், மீனவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகள் இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையப் பகுதிகளில் நேற்று (21-ம் தேதி) இரவு பத்து மணி முதல் நாளை (23-ம் தேதி) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பாக 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளதால் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 21.05.2018 இரவு 10.00 மணி முதல் 23.05.2018 காலை 08.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள், இரு சக்கரவாகனம், நான்கு சக்கரவாகனம் மூலம் பேரணியாக, வாள், கத்தி, கம்பு, கற்கள், அரசியல் மற்றும் சாதி கொடிக் கம்புகள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள பொதுமக்களை; அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடைஉத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கும், காவல்துறை அனுமதி பெற்ற இனங்களுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button