
ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, திரிகன் நடிப்பில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் திரைப்படம் தான் டெவில்.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மிஷ்கின். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கார்த்திக் முத்துக்குமார்.
மிஷ்கின் சகோதரர் தான் இயக்குனர் ஆதித்யா என்பதால், படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை நிலவியது.., இந்த எதிர்பார்ப்பை இயக்குனர் நிவர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைக்குள் சென்று விடலாம்..
விதார்த்துக்கும் பூர்ணாவிற்கும் திருமணம் நடக்கிறது. முதல் இரவிற்குகூட இல்லாமல், தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் உல்லாசமாக இருக்க சென்று விடுகிறார்.
தொடர்ந்து பூர்ணாவை தள்ளியே வைத்துக் கொள்கிறார் விதார்த். ஒருகட்டத்தில் , விபத்தாக திரிகணின் அறிமுகம் பூர்ணாவிற்கு கிடைக்க, அவருடன் நட்பு கொள்கிறார் பூர்ணா.

திரிகனுக்கு பூர்ணாவை பிடித்து போக, அவரை அடைய நினைக்கிறார். இந்த சூழலில் அலுவலக பெண்ணின் மோசடியை உணர்ந்து இனி மனைவி பூர்ணாவே கதி என திருந்தி வாழ நினைக்கிறார் விதார்த்.
தன்னை விட்டுச் செல்லும்படி பூர்ணா, திரிகனிடம் கேட்கிறார். ஆனால், மீண்டும் பூர்ணாவை தேடி வருகிறார் திரிகன்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
இதுவரை இல்லாத அழகாக, தேவதையாக காட்சியளித்திருக்கிறார் நடிகை பூர்ணா. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மொத்த கதையும் பூர்ணா மேல் தான் பயணிக்கிறது.
வழக்கும் போல் தனதுமுத்திரை நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நாயகன் விதார்த். வழக்கமான கதையாக செல்லும் படமானது அதை அழகாக கொண்டு வந்ததில் வென்றிருக்கிறார் இயக்குனர்.
திருமணம் நடைபெறும் இடத்தில், காலணிகளை அழகாக அடுக்கி வைக்கும் நபர், நடுக்கடலில் தனியாக செல்லும் படகு என காட்சி ஒவ்வொன்றையும் அழகூற கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இரண்டாம் பாதியில் மிஷ்கின் உள்ளே வந்த பிறகு படம் அதாள பாதாளத்திற்கு சென்று விடுகிறது படத்தின் மொத்த கதையும்.
முதல் பாதி ஒரு கவிதையாக நகர்வது படத்தினை பார்ப்பவர்களுக்கு ஒரு ஏக்கத்தை கொடுத்திருந்தது. இரண்டாம் பாதியில் டைம் ட்ராவல் ஆவது போன்று கதையை வேறு ஒரு கோணத்திற்கு திருப்பிச் சென்றது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
மிஷ்கினின் இசை படத்திற்கு பலமாக இருந்ததை மறுக்க முடியாது. கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
க்ளைமாக்ஸில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் டெவில் கொண்டாட்டமான ஒரு படைப்பாக இருந்திருக்கும்.
மொத்ததில் டெவில் – க்ளைமாக்ஸ் தடுமாற்றம்…





