Spotlightவிமர்சனங்கள்

டாக்டர் – விமர்சனம் 3.5/5

கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் “டாக்டர்”.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய், அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

படத்தினை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இன்று திரையரங்கில் இப்படம் வெளியாகியுள்ளது.

கதைப்படி,

நாயகன் சிவகார்த்திகேயன் மிலிட்டரியில் டாக்டராக பணிபுரிகிறார். மிகவும் நேர்மையாக இருக்கிறார். உதாரணமாக சொல்லப்போனால் அந்நியன் படத்தில் வரும் அம்பி விக்ரம் மாதிரி.

இவரின் இந்த அம்பி விக்ரம் கேரக்டரை கண்ட பின்பு நிச்சயக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துகிறார் நாயகி பிரியங்கா மோகன்.

இதனால், பிரியங்காவின் வீட்டிற்கு வந்து பேச வருகிறார் சிவகார்த்திகேயன். அச்சமயத்தில் பிரியங்காவின் அண்ணன் மகளான ஜாராவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது.

யார் அந்த கும்பல்.? எதற்காக கடத்தினார்கள்.? அவர்களை பிரியங்காவின் குடும்பத்தினரோடு சேர்ந்து சிவகார்த்திகேயன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

காமெடி, ஆக்‌ஷன் என கலந்த கலவையாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி தான். அதில் அவர் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு வித்தியாசமான நடிப்பை கொடுத்து அவர்களை ரசிக்க வைத்துள்ளார்.

வருண் கதாபாத்திரத்தில், கழுத்து வரை பட்டன், மிடுக்கான தோற்றம் என தோன்றினாலும், ஒரு சில இடங்களில் இன்னும் சற்று எக்ஸ்பிரஷன் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

நாயகியாக வந்த பிரியங்கா மோகன் பார்ப்பதற்காக அழகாக இருக்கிறார். தனது நடிப்பை வெளிக்காட்ட பல இடங்களில் காட்சிகள் கொடுக்கப்பட்டாலும், அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். இன்னும் நன்றாகவே தனது நடிப்பை வெளிக்காடியிருந்திருக்கலாம். நடனத்தில் அசர வைத்திருக்கிறார் பிரியங்கா.

ஜாராவின் அம்மாவாக அர்ச்சனா, இளவரசு, தீபா, அருண் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் தனது கதாபாத்திரத்தை நல்லவிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பலமாக நின்றிருக்கிறார் வில்லனாக வந்த வினய். அந்த கதாபாத்திரத்தை தனக்கே செதுக்கியது போல, வில்லன் கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். கம்பீரமான பார்வையில் அதிரடி காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஸ்டைலிஷான வில்லன் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

இன்னமும் நான் ஹீரோவாதான் நடிப்பேன் என ஓடிக் கொண்டிருக்கும் நாயகர்கள் சிலர், வினய்யை பார்த்து திருந்தலாம்.

யோகிபாபுவின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. யோகிபாபுவின் காமெடிக்கு ரசிகர்களாக இருக்கும் பலருக்கு கொஞ்சம் இந்த ப்டத்தில் அவர் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்.

மற்றொரு காமெடியனாக வந்த ரெடின் கிங்க்ஸ்லி ஒரு சில இடத்தில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். மற்றபடி, பல இடங்களில் எரிச்சலையடைய தான் வைத்திருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் கொடுத்த காமெடி ட்ராக், இப்படத்தில் மிஸ்ஸிங்க்.

அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரிப்பீட் மோட்

பின்னனி இசையில் ஒரு சில இடங்களில் இன்னும் சற்று நன்றாகவே கொடுத்திருக்கலாம் என்ற தோன்றியது. மற்றபடி ஓகே தான்.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பக்கா… கோவாவின் அழகை அச்சடித்தாற்போல் நகலெடுத்திருக்கிறார்.

ஜானி மாஸ்டரின் நடனத்தில் “செல்லம்மா செல்லமா..” பாடல் வேற ரகம்.. சிவகார்த்திகேயன் நடனத்தில் அசர வைத்திருக்கிறார்.

நல்ல ஒரு கதை, நல்ல ஒரு ஹீரோ என இரண்டையும் கச்சிதமாக எடுத்து அதை நேர்த்தியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

அனைவரையும் சிரிக்க வைக்க இன்னும் அதிகப்படியான காட்சிகள் படத்தில் இருந்தும், அதை செய்து முடிக்க தவறியிருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி,

டாக்டர் – பக்கா எண்டர்டெயினர் தான்… ரசிக்கலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button