Spotlightசினிமா

இது தான் முருங்கைக்காய் ரகசியம்… போட்டுடைத்த கே பாக்யராஜ்

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட், சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.

இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.

‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது,

“இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென காலமானது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களுடைய கனவெல்லாம் இந்தப் படத்தின் மீதுதான் இருந்தது .அந்த இருவருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அவர்களது விருப்பம் இதுவாகத்தான் இருக்கும்.எங்களுடன் இணைந்து ராஜ்குமார் வேலுச்சாமி அவர்கள் பெரும் பக்கபலமாக இருந்து உதவினார்.

அதுமட்டுமல்லாமல் எங்களது சிரமங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இது மாதிரி புதியதாக வருபவர்கள் சிரமப்படக்கூடாது அவர்களுக்கு நாம் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.அதன்படி அண்மையில் நாங்கள் ஒரு ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறோம். அது தான் பாம்பூ ட்ரீஸ் ஸ்டுடியோ .அது முழுக்க முழுக்க வளரும் கலைஞர்களை உயர்த்தி விடுவதற்காகவும், அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பக் கருவி வசதிகள் செய்து கொடுப்பதற்காகவும் என்ற நோக்கத்தில் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

படத்தயாரிப்பில் இணைந்துள்ள அல்முரா நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார் வேலுச்சாமி பேசும்போது,

இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும் போது ,

“இங்கே தயாரிப்பாளர் ராஜ்குமார் வேலுச்சாமி ஈராக், துபாய் என்று பரபரப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறார். அங்கேயும் தனியாக இருப்பதாகச் சொல்கிறார். தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நான் கேட்டேன்.

படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படி பல நாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும் போது இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள் .அன்றும் ஒன்றுமே கிடைக்காது போகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால் மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்த கல்லைத் தூக்கி கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான் .அதே நேரத்தில் கண்வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார், தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே நான் கல்லை கோயிலைத்தாண்டித் தானே வீசினேன்? என்றான் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா ? என்றான். விநாயகர் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார் .அதுபோல இடையூறுகள் வருவது என்றாலும் எப்படியென்றாலும் வந்தே தீரும்.

இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது
எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன்.

இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும் என்பார் பாட்டி. எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது .
படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மதுஸ்ரீ இங்கே எடைக் குறைப்பு பற்றிப் பேசினார் .இப்படி சிரமப்பட்டு வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. நான் சின்ன வீடு படத்தில் கல்பனாவுக்கு தினசரி அல்வா கொடுத்தேன். ஏனென்றால் அவர் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக. சிரமப்பட்டு உழைத்தால் தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.

நான் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் கம்பைச் சுற்றி பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோபியில் 30 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு தான் அப்படி நடித்தேன் .அப்போது நான் ஒரு கையால் சுற்றி விளையாடுவது போல் இருக்கும் .இரண்டு கையாலும் சுற்றிப் பிடிப்பது போல் பயிற்சி பெற வேண்டும் என்று அழகிரிசாமி மாஸ்டரிடம் கேட்டேன்.அது முடியாது கஷ்டம் என்றார். அதன் நுட்பத்தைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன்.அவருக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் நான் கற்றுக் கொண்டதைப் படத்தில் வைத்தேன். மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொண்டு படத்தில் சுற்றி இருப்பேன். படத்தை பார்த்து எம்ஜிஆர் எத்தனை வருடமாக இதற்குப் பயிற்சி எடுத்தாய் என்று கேட்டார். நான் விசயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை .பொய் சொல்லாதே என்றார்.அப்போது நான் சொன்னேன் மனது வைத்தால் எதுவும் முடியும் என்றேன் .

இங்கே தொழில்நுட்பக் கலைஞர்கள் பேசியபோது மன நிறைவோடு பேசினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

இங்கே காவல்துறையைச் சேர்ந்த இளங்கோவன் தன் மகனை நடிக்க வைத்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் காலத்தில் நான் நாடகம் பார்க்கப் போகிறேன் என்றாலே வீட்டில் பெல்ட்அடி விழும்.

சத்யராஜ் மகன் சிபிராஜும் சரி என் மகன் சாந்தனுவும் சரி சினிமா கனவுடன் இருந்ததால் படிப்பில் பெரிதாக வர முடியவில்லை. அதனால் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். அவர்கள் மனதில் உள்ள கனவை நிறைவேற்றவே பெரிதும் விரும்பினார்கள். எனவே மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.

படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் “என்று கூறினார்.

‘லாக்’ படக் குழுவினர் சார்பில் இந்த விழாவில் கேக் வெட்டி இயக்குநர் பாக்யராஜுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் நடிகர் விஜய் சூரிய பாலாஜி, மதன் ,படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், காவல்துறை உயர் அதிகாரியான ராஜகோபால், தொழிலதிபர்கள் ரஜினிகாந்த் சண்முகம் ,ரஞ்சித் கருணாகரன், ஜூலியஸ் கிறிஸ்டோபர்,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த் சண்முகம், சுண்டாட்டம் பட இயக்குநர் பிரம்மா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Facebook Comments

Related Articles

Back to top button