
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக இணைந்து தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படத்திற்கு ‘RX’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் இப்படத்தில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்ராமா திரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒரு போஸ்டரில் ரெஜினா முகக்கவசத்துடன் தீவிரமான பார்வையில் தோன்ற, மற்றொரு போஸ்டரில் ரயிலில் அச்சத்துடன் பயணிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
‘RX’ என்ற தலைப்பும் போஸ்டர்களும் மருத்துவத் துறையைச் சுற்றிய மர்மங்கள் அல்லது மெடிக்கல் மாஃபியா தொடர்பான கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் படத்தின் கதைக்களம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





