
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”.
ஏற்கனவே வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படமான ஜிகர்தண்டா படத்தின் மற்றொரு பாகமாக உருவாகியிருக்கிறது.
கதை 1973 ஆம் வருடம் நடைபெறுகிறது. தென் தமிழகத்தை அரசியலிலும் சரி, அதிகாரத்திலும் சரி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் இளவரசு.
இவருக்கு உறுதுணையாக நான்கு தலைகள் இருக்கின்றன. அதில் ஒரு தலையாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். மதுரை பகுதியை தன்னுடைய கோட்டையாக்கி வைத்து வருகிறார் லாரன்ஸ்.
இளவரசுவின் வளர்ச்சி அரசியலில் தன்னுடைய வளர்ச்சியை பாதிக்கும் என்று நடிகரும் அரசியலில் முக்கிய பிரமுகருமான ஷைன். அதனால், இளவரசு பின்னால் நிற்கும் நான்கு தலைகளையும் எடுக்க ஷைன் முடிவெடுக்கிறார்.
அதற்காக தன் தம்பியும் போலீஸ் உயரதிகாரியுமான நவீன் சந்திராவிடம் இந்த தலைகளை தூக்க சொல்கிறார். நவீன், ஜெயிலில் இருந்து நான்கு கைதிகளை எடுத்து நான்கு பேரையும் கொல்ல சொல்கிறார்.

அதில், ஒரு கைதியான எஸ் ஜே சூர்யா தான் லாரன்ஸை கொல்ல செல்கிறார். செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் எஸ் ஜே சூர்யா, இரத்தத்தை பார்த்தாலே மயங்கி விழுவார். அவர், லாரன்ஸை எப்படி கொன்றார்.?? மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் என்னவானது.?? அரசியல் நிலவரம் என்னவானது.?? யானைகளை தொடர்ந்து கொன்று குவித்த செட்டானி என்னவானான்?? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். கடைசியாக வந்த சில படங்கள் தொடர்ச்சியாக லாரன்ஸூக்கு கை கொடுக்காத நிலையில், நிச்சயம் இது ஒரு கம்-பேக் படமாக இருக்கும்.
கருப்பாக இருந்ததற்காகவே இப்படம் இவருக்கு கிடைத்திருக்கும் போல, அதற்கான காரணமும் நச்சென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆக்ஷன் காட்சிகளிலும் தனது அதிரடியை காட்டியிருக்கிறார் லாரன்ஸ்.
லாரன்ஸுக்கு சரிசமமான காட்சிகளை எஸ் ஜே சூர்யாவிற்கும் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்சினிமாவின் நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் இவர், இப்படத்திலும் தனது கண்களாலும் உடல் மொழியாலும் அரக்கன் என்பதை நடிப்பில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
எஸ் ஜே சூர்யாவோடு போட்டி போட்டுக் கொண்டு வசனத்தை வீசுவதில் நிமிஷா தூள் கிளப்பியிருக்கிறார். கண்களால் பலரையும் வசியம் செய்து விடுகிறார்.

வில்லனாக நடித்த நவீனை பார்த்தாலே நமக்கு கோபம் வரும் அளவிற்கு தனது வில்லத்தனத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
முதலமைச்சராக நடித்தவர், இளவரசு, ஷைன், செட்டானியாக நடித்தவர் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் செதுக்கியிருக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது.
படத்தின் முக்கியமானவர்கள் யார் என்றால் ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர்கள் மற்றும் சந்தோஷ் நாராயணன்.
இவர்கள் மூவரும் இல்லை என்றால் படத்தினை நினைத்து பார்க்க கூட முடியாது. கலை இயக்குனர்களாக பணி புரிந்த சுப்ரமணியன் மற்றும் குமரன் ஞானப்பன் இருவரும் இரு கண்களாக படத்தின் ஆர்ட் வேலைகளை கச்சிதமாக செய்து முடித்ஹ்டிருக்கிறார்கள்.
திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு செம…
மிகப்பெரும் பலமே பின்னணி இசை தான். ஒவ்வொன்றையும் செதுக்கி எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அன்னக்கொடி பாடல் ஆட்டம்போட வைத்திருக்கிறது..
கதையை கச்சிதமாக எடுத்து அதை அழகாக ரசிகர்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
ஒவ்வொரு காட்சிகளுக்குமான மெனக்கெடல் நன்றாகவே கண்களில் தெரிகிறது. காடுகளின் பாதுகாப்பையும் படத்தில் கொண்டு வந்ததால் ஒரு நல்ல மெசேஜோடும் கதை நகர்கிறது.
மொத்தத்தில்,
ஜிகர்தண்டா – நன்றாகவே பருகலாம்…





