
நடிகர்கள்: அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் , ஹரீஷ், சச்சின், காவ்யா
தயாரிப்பு: Zion Films & MRP Entertainment
தயாரிப்பாளர்கள்: சௌந்தர்யா ரஜினிகாந்த், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்
இசை: ஷான் ரோல்டன்
படத்தொகுப்பு: சுரேஷ்
ஒளிப்பதிவு: சுரேஷ் கிருஷ்ணா
திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறார் அபிஷன் ஜீவிந்த்., பார்க்கும் பெண்களை எல்லாம் எதாவது ஒரு காரணம் சொல்லி, அவர்களை வேண்டாம் என்று கூறி வருகிறார் அபிஷன்.
இந்நிலையில், புகைப்படம், பெயர் என்று எதுவும் கூறாமல் நாயகி அனஸ்வரா ராஜனை பெண் பார்க்க காபி ஷாப் ஒன்றிற்கு செல்லுமாறு அபிஷனை அனுப்பி வைக்கிறார் அவரது அக்கா.
அங்கு, அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன். இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்கின்றனர். அதன்பிறகு தான் தெரிகிறது, அபிஷன் தன் பள்ளியில் தனக்கு முன் படித்த சீனியர் என்று. அதன்பிறகு, இருவருக்குள்ளும் நல்லதொரு நெருக்கம் ஏற்படுகிறது.

இருவரும் தங்களது எக்ஸ் காதல் பற்றிய விஷயத்தை ஷேர் செய்து கொள்கின்றனர். இருவரும் பள்ளியில் நடந்த ஒரு தலை காதலை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.
அந்த எக்ஸ் காதல் இவர்களுக்குள் என்ன மாதிரியான மனநிலையை கொடுத்தது.? இந்த ஜோடி இணைந்ததா.? இல்லையா.??? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் அபிஷன். அந்த படத்திலேயே சின்னதாக ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
அடுத்ததாக, அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் இந்த வித் லவ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் அபிஷன்.
கதையின் நாயகனாக மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் அபிஷன். ஒவ்வொரு காட்சியிலும் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். லவ் டூடே மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரூட்டை பிடித்த பிரதீப் ரங்கநாதன் போல, வித் லவ் படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரூட்டை பிடித்து அனைவரின் மனதிலும் எளிதாக ஒட்டிக் கொண்டுவிட்டார் அபிஷன்.

காதல் காட்சி, துறுதுறுவென நடிப்பு, எமோஷன்ஸ் என பல கோணங்களில் தனது நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் அபிஷன். இவருக்கு இணையாக நாயகியான அனஸ்வரா ராஜனும் தனது பங்கிற்கு அழகான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
அபிஷனுக்கும் அனஸ்வராவிற்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது. இருவரும் சேர்ந்து செல்லும் பயணமாவது மிக எளிமையாக இருந்தது படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. அனஸ்வராவின் அழகும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
மேலும், படத்தில் நடித்திருந்த காவ்யா, அழகான ஒரு நடிப்பைக் கொடுத்திருந்தார். அதிலும், அபிஷனும் காவ்யாவும் பேசிக் கொண்டிருக்கும் காட்சியில் தேவதை போன்ற ஒரு அழகை கொடுத்து ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்டார் காவ்யா. ஒரு சில காட்சிகள் என்றாலும் தனது அனுபவ நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் சரவணன்.
மேலும், தேனி முருகன், ஹரீஷ் குமார், சச்சின் நாச்சியப்பன் உள்ளிட்ட நடிகர்களும் இயக்குனர் சொன்னதை அளவாக செய்து முடித்திருந்தனர்.
ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம். பல இடங்களில் படத்தின் கதை பேசியதை விட, பின்னணி இசை அதிகளவில் பேசியுள்ளது. பாடல்களும் ரசிக்க வைத்திருக்கின்றன.
ஸ்ரேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அவ்வளவு அழகு. பாடல் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
வழக்கமான தமிழ் சினிமாவாக சென்று கொண்டிருக்கிறதே முதல் பாதி என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, இது அந்தமாதிரியான சினிமா இல்லை என்று ரூட்டை மாற்றி, இரண்டாம் பாதியில் வேறு ஒரு உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்று ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர் மதன். காமெடி, செண்டிமெண்ட், காதல் என கதையை மிக அழகாக கடத்திச் சென்று விட்டார் மதன்.
இந்த கால இளைஞர், இளைஞிகளை எளிதில் கவரும் வண்ணம் கதையை மிக நச்’சென்று கொண்டு சென்றிருக்கிறார் மதன்.
தமிழ் சினிமாவில் மதனுக்கென்று ஒரு அறிமுகம் இப்படத்தின் வாயிலாக கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி தான்.
மொத்தத்தில்,
வித் லவ்- அழகானது எக்ஸ் காதல்….




