
அபிலாஷ் ரெட்டி அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர் , மாளவிகா, நிரூப் , மாஸ்டர் சௌர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பைக்கர்.
படத்தினை வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி இருவரும் தயாரித்திருக்கிறார்கள். இசையை ஜிப்ரான் வைபோதா கவனித்திருக்கிறார். ஒளிப்பதிவினை ஜே யுவராஜ் கவனித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்… நாயகன் ஷர்வானந்த் மற்றும் நாயகி மாளவிகா இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மகனாக வருகிறார் மாஸ்டர் செளர்யா. ஷர்வானந்த் தந்தையாக வருகிறார் டாக்டர் ராஜசேகர். ஷர்வானந்திற்கு ஒரு ப்ளாஷ் பேக் காட்சி இருக்கிறது.
அனைவராலும் பெரிதும் கொண்டாடக்கூடிய பைக்ரேஸ் வீரராக இருக்கிறார் ஷர்வானந்த். தனது காதலியை திருமணம் முடித்த சமயத்தில் நடந்த ஒரு ரேஸில் ஒரு சம்பவம் நடக்க, மனைவி இனி ரேஸில் கலந்து கொள்ளக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
இதனால், ஷர்வானந்துக்கு குருவாக இருந்த, ராஜசேகரை விட்டு பிரிகிறார். சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையும் குருவுமான ராஜசேகருக்காக மீண்டும் பைக் ரேஸில் ஈடுபட வருகிறார். ஏன் எதற்கு என்பதெல்லாம் படத்தின் இரண்டாம் பாதியில் கூறியிருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக ஷர்வானந்த் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் இந்த கதாபாத்திரத்திற்கு. தனது தந்தையுடனான பாசம், மனைவி மீது வைத்திருக்கும் காதல், மகன் மீது வைத்திருக்கும் அன்பு, தனது உயிராக நினைக்கும் பைக் ரேஸ் போட்டியில் இருக்கும் எமோஷன் என எல்லா கோணங்களிலும் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி மாளவிகா காட்சிகளில் அழகாக தெரிகிறார். நடிப்பிலும் நன்றாகவே மிளிர்ந்திருக்கிறார். ராஜசேகர் தனது அனுபவ நடிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார்.
அப்பா – மகன் உறவை இன்னும் பலமாக காண்பித்திருக்கலாம்.. ப்ளாஷ் பேக் காட்சியில் இவர் விளையாட்டை விட்டு மொத்தமாக வெளியே சென்ற காரணம் பெரிதான ஒரு தாக்கத்தை கொடுக்கவில்லை. மீண்டும் இவர் ஜெயித்தாக வேண்டும் என்ற காரணமும் பெரிய பலமானதாக இல்லாததால், படம் நமக்குள் கனெக்ட் ஆகவில்லை.
பைக் ரேஸ் போட்டியினை படமாக்கிய விதத்திற்காக மட்டுமே படக்குழுவினரை வாழ்த்தலாமே தவிர, மற்றபடி கதையிலும் சரி திரைக்கதையிலும் சரி பெரிதான ஒரு ஈர்ப்பைக் கொடுக்க இயக்குனர் தவறியிருப்பதால், பைக்கர் ஆஃப் மோட்’க்குச் சென்று விட்டது.
ரேட்டிங்: 2.25/5





