Spotlightவிமர்சனங்கள்

ராஜவம்சம் – விமர்சனம் 2.25/5

திர்வேலு இயக்கத்தில் சசிகுமார் ,நிக்கிகல்ராணி , ராதாரவி ,தம்பிராமைய்யா ,விஜயகுமார் , சதிஷ் , மனோபாலா, சிங்கம்புலி , யோகிபாபு , ஆடம்ஸ் , சரவணாசக்திமணி, சிலம்பம்சேதுபதி ,ரமணி , ராஜ்கபூர் ,தாஸ் , நமோநாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா , நிரோஷா ,சந்தானலட்சுமி ,சசிகலா ,யமுனா ,மணிசந்தனா ,மணிமேகலை,மீரா ,லாவண்யா ,ரஞ்சனா,,ரஞ்சிதா ,ரம்யா ,தீபா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் தான் இந்த “ராஜவம்சம்”.

குடும்ப அருமை பெருமைகளை கூற வந்த ராஜவம்சம் ஜொலித்ததா இல்லையா என்பதை பார்த்துவிடலாம்.

நாயகன் சசிகுமார் சுமார் 40 பேர் உள்ள ஒரு கூட்டுக் குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இந்த வீட்டின் பெரிய தூண்களாக இருக்கிறார்கள் விஜயகுமாரும் அவரது மனைவியுமான ரமணியும். கிராமத்தில் விவசாயம் செய்து ஊரே மெச்சும்படியாக கெளரவமாக வாழ்ந்து வருகிறது விஜயகுமாரின் குடும்பம்.

சசிகுமார் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரு மிகப்பெரும் ப்ராஜெக்ட் ஒன்று சசிகுமாரின் திறமையால் அவரது நிறுவனத்திற்கு கிடைக்கிறது.

இந்த ப்ராஜெக்டை கெடுப்பதற்காக மூன்று நிறுவனங்களின் நிறுவனர்களும் சதிதிட்டம் தீட்டுகின்றனர். ஒரே மாதத்தில் ப்ராஜெக்டை முடிப்பதற்கான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் சசிகுமார்.

அதேசமயம், வீட்டில் திருமணத்திலிருந்து தப்பிப்பதற்காக நிக்கி கல்ராணியை தான் காதலிப்பதாக பொய்யை கூறி அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் சசிகுமார். வீட்டில் உள்ளவர்களும் காதலுக்கு சம்மதித்து விட, படிப்படியாக திருமணம் வரை சென்று விடுகிறது.

சசிகுமார் வீட்டில் நடிக்க வந்த நிக்கி கல்ராணி, அதே வீட்டிற்கு மருமகளாக ஆகிறார். யார் இந்த நிக்கி கல்ராணி.? சசிகுமாரை ஏன் திருமணம் செய்து கொண்டார்.? குறிப்பிட்ட காலத்திற்குள் ப்ராஜக்ட் முடிக்கப்பட்டதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

சசிகுமார், வழக்கம்போல் தனது நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். காதல் காட்சிக்கும் அதே ரியாக்‌ஷன் தான், செண்டிமெண்ட் காட்சிக்கும் அதே ரியாக்‌ஷன் தானா சசிகுமார் சாரே.?

நிக்கி கல்ராணி பல இடங்களில் ஓவர் பெர்பார்மண்ஸ் கொடுத்து காட்சியை போரடிக்க வைத்துவிட்டார். அதிலும், க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன் வரும் காட்சியில் “முடியலப்பா சாமி.. எங்களை விட்ருங்க” என்றே சொல்ல வைத்துவிட்டார்.

படத்தில் 30க்கும் மேற்பட்ட நடிகர்கள் இருந்தும் யாருக்கும் பெரிதான டயாலாக்குகள் கொடுக்கப்படாமல் கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைத்திருக்கிறார்கள். சிங்கம்புலியின் காமெடி மட்டும் ஓரிரு இடங்களில் ரசிக்க வைத்துள்ளது.

சதீஷின் காமெடியும் ஆங்காங்கே மட்டும் தான் எட்டி பார்த்து ரசிக்க வைத்திருக்கிறது.

யோகிபாபுவிற்கு என்னதான் ஆச்சு.? காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கோபம் அடைய வைக்கும் வேலையை செய்து வருகிறார்.

நடிகர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு வேலை எதுவும் இல்லாததே பெரும் துயரம். எந்த மாதிரி கதையை கூறி இயக்குனர் இவர்களை இப்படத்தில் நடிக்க சம்மதம் வாங்கியிருப்பார் என்று தெரியவில்லை.?

படத்திற்கு பெரும் பின்னடைவு இசை தான். இதன் இசையமைப்பாளர் சாம் சி எஸ் என்பது தான் மற்றுமொரு வேதனை. விக்ரம் வேதா, கைதி என பல படங்களுக்கு வெறித்தனமான பின்னனி இசை, பாடலை கொடுத்த சாம், இப்படியொரு பாடல்கள், பின்னனி இசையை கொடுத்திருப்பதை நினைத்து வேதனைதான் பட வேண்டியிருக்கிறது. பேசாம நீங்க முன்ன மாதிரி(விக்ரம் வேதா, கைதி ) படங்களுக்கு இசை அமைக்க போயிடுங்க சாம், நமக்கு இந்த வயல்வெளி, கிராமம் இதெல்லாம் செட் ஆகாது.

படத்தில் சற்று ஆறுதல் என்றால் அது ஒளிப்பதிவு தான். சித்தார்த் அவர்களின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். 3 சண்டைக்காட்சிகளையும், கிராமப்புற காட்சிகளையும் அழகூற காட்டியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குடும்பம் சார்ந்து வந்த மூன்று படங்களை பார்த்து “ராஜவம்சம்” என்ற கலவையான கமர்ஷியல் மசாலாவை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கதையில் பெரிதான சுவாரஸ்யம் இல்லாததும், செண்டிமெண்ட் காட்சிக்கு படத்தில் பெரிதும் இடம் இல்லாததாலும் “ராஜவம்சம்”, வாசனை இல்லாமல் போனது.

 

Facebook Comments

Related Articles

Back to top button