Spotlightவிமர்சனங்கள்

வனம் – விமர்சனம் 2.5/5

ஸ்ரீ கண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வனம்”.

கதைப்படி,

அடர்ந்த வனப்பகுதியின் நடுவே ஒரு கலைக்கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் வெற்றி. கல்லூரியின் ஆண்கள் விடுதியில் ஒரு குறிப்பிட்ட அறையில் தங்கும் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். காரணம் என்னவென்று ஆராய்ந்த போது, அங்கு ஒரு தீய சக்தி இருப்பதை அறிகிறார் நாயகன் வெற்றி.

அதே அறையில் தான் வெற்றியும் தங்கியிருக்கிறார். அடுத்ததாக நம்மை தான் அது கொல்லும் என்ற அச்சத்தில் இருக்கிறார் வெற்றி. அந்த தீய சக்தி யார் என்றும் அறியும் முயற்சியில் இறங்குகின்றனர் வெற்றியும் அவரது காதலியாக வரும் ஸ்மிருதி வெங்கட்டும்.

கதை ப்ளாஷ் பேக் செல்கிறது,

பல வருடங்களுக்கு முன் ஜமின்தார் வேலாராமமூர்த்தி பல பெண்களை சீரழித்து அவர்களை துன்புறுத்தும் காமமிருகமாக வாழ்ந்து வருபவர். அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒரு கல்லூரியை கட்டி வைத்தால் காலத்திற்கும் உங்களது பெயர் நிலைநிற்கும் என ஜோதிடர் ஒருவர் கூறியதை தொடர்ந்து வனப்பகுதிக்குள் கல்லூரி கட்ட தீர்மானிக்கிறார் ஜமீன்தார் வேலா ராமமூர்த்தி.

கல்லூரி கட்டப்பட வேண்டிய இடத்தில் பூர்வகுடியினர் சிலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் அனு சித்தாரா முதன்மையானவர். நிறைமாத கர்ப்பினியான இவரின் மேல் கண் வைக்கிறார் வேலா ராமமூர்த்தி. அனு சித்தாராவை கொலை செய்தால் மட்டுமே அந்த இடம் கிடைக்கும் என்பதால், அனு சித்தாராவை கொலை செய்கிறார் வேலா ராமமூர்த்தி.

மறுஜென்மத்தில்(உடல் வேறு ஆன்மா ஒன்று), வேலா ராமமூர்த்தியை அனு சித்தாரா பலி வாங்கினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

8 தோட்டாக்கள், ஜீவி என இரண்டு வெற்றி படங்களில் தனது திறமையை நிரூபித்த நாயகன் வெற்றி, இப்படத்தில் சற்று சருக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகனுக்கு பெரிதான ஸ்கோப் இல்லாதது பெரும் பின்னடைவு. நேர்த்தியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த நாயகன் வெற்றி இக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார். வெற்றியே உஷாரா இருங்க.

நாயகி ஸ்மிருதி வெங்கட் காட்சிகளில் அழகாக வந்து செல்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட காட்சியை அழகாக செய்து முடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வந்த அனு சித்தாராவிற்கு மொத்தமாக 4 காட்சிகள் மட்டுமே என்பதால் ஸ்கோர் செய்ய பெரிதான் இடம் இல்லை. அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்.

ஜமீன்தாராக வந்த வேலாராமமூர்த்திக்கு இக்கதாபாத்திரம் சுத்தமாக எடுபடவில்லை. யார் சொல்லி இந்த ஜமீன்தார் கதாபாத்திரத்திற்கு வேலா ராமமூர்த்தியை தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. சேதுபதி, கிடாரி என பல படங்களில் தனது பார்வையிலேயே மிரட்டலை கொடுத்தவருக்கு இக்கதாபாத்திரம் எடுபடாமல் போனது ஏமாற்றமே.

வழக்கமான பழிவாங்கும் பூர்வ ஜென்ம கதை, உருவம் வேறு ஆன்மா ஒன்று என்ற ஒற்றை வரியில் வனத்தின் கதையை டெவலெப் செய்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் ஓட்டத்தில் பெரிதான ஈர்ப்பு இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடைவு.

விக்ரம் மோகனின் ஒளிப்பதிவு கச்சிதம். வனப்பகுதியையும் ஹாஸ்டலில் நடக்கும் த்ரில்லிங்கையும் மிகவும் நேர்த்தியாக கையாண்டு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ரான் ஈத்தன் யோஹானின் பின்னனி இசை மிரட்டல்.

வனம் – ட்ரெய்லரில் கொடுத்த ஈர்ப்பை படம் கொடுக்க தவறிவிட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button