Spotlightவிமர்சனங்கள்

வேழம் – விமர்சனம் 3.25/5

சந்தீப் ஷாம் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன், கிட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “வேழம்”. வேழம் என்றால் யானையைக் குறிக்கும்.

அமைதியாக இருக்கும் யானை, மதம் பிடித்தால் அசுர பலம் கொண்டு தாக்கும்., அப்படியாக இந்த வேழம் யாரை தாக்கியது என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,

அசோக் செல்வனும் ஐஸ்வர்யா மேனனும் காதலர்கள். ஒருநாள், மாலை நேரப் பொழுதில் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, முகமறியா இருவர் அசோக் செல்வனை அடித்து, ஐஸ்வர்யா மேனனை கொலை செய்து விடுகிறார்கள்.

உறவினரான இன்ஸ்பெக்டர் ஷ்யாம் சுந்தர் அசோக் செல்வனை காப்பாற்றி விடுகிறார். நாயகியை கொல்லும் போது கேட்டக் குரலைக் கொண்டு
வில்லனை தேடுகிறார் அசோக் செல்வன்..

வருடங்களும் உருண்டோட வில்லனை கண்டுபிடிக்க முடியவில்லை. 5 வருடங்கள் கழித்து அந்த அந்த இரு கொலையாளிகளை கண்டுபிடித்து விடுகிறார் அசோக் செல்வன்..

அவர்கள் வேறொருவர் தான் ஐஸ்வர்யா மேனனைக் கொலை செய்யக் கூறினர், எனக் கூற இப்படியாக அடுத்தடுத்த தலைகளாக பயணமாக, கொலையாளி யார் என்பதை அசோக் செல்வன் கண்டறிந்தாரா ??? உண்மையாகவே சம்பவ இடத்தில் நடந்தது என்ன ? இதுவே படத்தின் மீதிக் கதை….

நாயகன் அசோக் செல்வனுக்கு இப்படம் நல்லதொரு ப்ரேக்காக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தொடர்ந்து தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வன், இக்கதையையும் நன்றாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார். காதலிக்கும் போது சாக்லேட் பாயாகவும், காதலியை இழந்து வாடும் போது முரட்டுத்தனமான வெறி பிடித்தவராகவும் தோன்றி படத்தில் அவரை ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகிகள் ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி இருவரும் அழகு தேவதைகளாக காட்சியளித்திருந்தனர். அதிலும், ஐஸ்வர்யா மேனனுக்கு நடிக்க இடம் அதிகமாக கொடுக்கப்பட்டதால் அதை திறம்பட கையாண்டிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் இவருக்காக வைக்கப்பட்ட காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தோன்றிய ஷ்யாம் சுந்தர் தமிழ் சினிமாவிற்கு புதுவரவு.. அழகான தோற்றமாய் வந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் ஏனோவென்று செல்லும் கதை, இரண்டாம் பாதியில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்டுகளால் கதை சூடு பிடிக்கிறது. சீட்டின் நுனியில் அமர வைத்து கதையை வேகமாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் சந்தீப் ஷாம்.

ஓவர் ட்விஸ்டை சிறிது குறைத்திருக்கலாமே என்று தோன்றியதே தவிர, மற்றபடி கதை நகர்வு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

ஜானு சந்தரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை படத்தோடு பரபரப்பாக பயணம் புரிய கைகோர்த்திருக்கிறது.

சக்தி அரவிந்த் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்… ஊட்டி தான் கதைக்களம் என்பதால் கேமராவின் பணிகளை கனக்கச்சிதமாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தொகுப்பாளர் ஏகே பிரசாத் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

வேழம் – வேகம்

Facebook Comments

Related Articles

Back to top button