Spotlightவிமர்சனங்கள்

சக்ரா விமர்சனம் 3.25/5

யோக்யா படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் படம் ‘சக்ரா’. சுமார் 1500 திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்ட வெளியீடாக இத்திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

கதைப்படி…

விஷால் இராணுவ அதிகாரியாக வருகிறார். இவரது தந்தை, தாத்தா என இருவரும் நாட்டிற்காக இராணுவத்தில் பணிபுரிந்து உயிர்தியாகம் செய்தவர்கள். விஷாலின் தந்தையான நாசர் இந்திய அரசால் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.

ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திர தினமான அந்நாளில், சென்னை மாநகரில் சுமார் 50 வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறுகிறது. இந்த 50 வீடுகளில் விஷாலின் வீடும் ஒன்று.

விஷாலின் பாட்டியாக வரும் கே ஆர் விஜயாவிடம் நகை, பணத்தையும் கொள்ளையடித்து விட்டு, வீட்டில் இருந்த அசோக சக்ராவையும் கொள்ளையடித்து சென்று விடுகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் விஷாலின் காதலியான ஏ எஸ் பியாக வரும் ஷ்ரதா ஸ்ரீநாத். தனது தந்தையின் நினைவாக இருக்கும் அசோக சக்ரா விருதை கண்டுபிடிப்பதற்காக விஷாலும் இந்த வழக்கில் நுழைகிறார்.

இந்த வழக்கின் விசாரணை எப்படி நடந்தது..?? குற்றவாளி யார்.?? அவரை கைது செய்தார்களா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.,

இரும்புத்திரை படத்தில் தோன்றிய அதே கம்பீரமான தோற்றத்தில் வந்து மீண்டும் மிரட்டியிருக்கிறார் விஷால். இன்வஸ்டிகேஷன், ஆக்‌ஷன் என இரண்டிலும் முறுக்குத்தனமான உடலோடு கம்பீரமாக நடித்திருக்கிறார் விஷால்.

ஷ்ரதா ஸ்ரீநாத், போலீஸ் அதிகாரியாக தோன்றி அசர வைத்திருக்கிறார். மிடுக்கான தோற்றத்தில் தோன்றி தனது கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் ஏற்றியிருக்கிறார்.

ரெஜினா கேஸண்ட்ரா படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். இவரது நடிப்பு ஓகே என்றாலும், அந்த கதாபாத்திரத்தின் வலுவுக்கு ஏற்ற தோற்றம் இல்லை என்பதால் சற்று ‘உச்..’ கொட்ட வைக்கிறது.

படத்திற்கு மிகப்பெரும் பலம் யுவன் ஷங்கரின் இசை தான்.. பின்னனி இசையில் கதையின் ஓட்டத்தை பன்மடங்கு அதிகரிக்க வைத்திருக்கிறது. பி ஜி எம் திரையரங்கை அதிர வைக்கிறது.

பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு வேகம் எடுக்க வைத்துள்ளது.

இரும்புத்திரை படத்தினை போன்று படுவேகமான திரைக்கதை தான் ‘சக்ரா’. டிஜிட்டல் முறைகேடுகளை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சக்ரா’ தனது சுழற்சியை கச்சிதமாக செய்துள்ளது.. இயக்குனராக ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.

சக்ரா – வேகம்..

Facebook Comments

Related Articles

Back to top button