Spotlightசினிமாவிமர்சனங்கள்

பொன்மாணிக்கவேல் – விமர்சனம் 3/5

முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “பொன் மாணிக்கவேல்”.

கதைப்படி,

நீதிபதி ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியில் சுட்டுக் கொலை செய்து விடுகின்றனர். யார் இந்த கொலையை செய்தது என விசாரணையை துவக்குகிறது காவல்துறை. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், காவல்துறையின் மேல் ஏற்பட்ட விரக்தியில் பணியை துறந்து சென்ற பொன்மாணிக்கவேலிடம் (பிரபுதேவா) இந்த வழக்கை ஒப்படைக்கின்றனர்.

விசாரணையை கையில் எடுத்த வேலையில், வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் ஒருவரும் கொல்லப்படுகிறார். அடுத்து கொலை செய்யப்படும் நபர் பெரும் தொழிலதிபரான சுரேஷ் மேனன் என கண்டறிகின்றனர். எதற்காக இந்த கொலை நடைபெறுகிறது.? யார் இந்த கொலையை செய்கிறார்கள்.? சுரேஷ் மேனன் காப்பாற்றப்பட்டாரா.? அல்லது அடுத்தும் அந்த கொலை தொடர்கிறதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

பொன்மாணிக்கவேலாக பிரபுதேவா மிடுக்காக இருக்கிறார். கஞ்சி போட்ட யூனிபார்ம், நடையில் ஒரு தோரணை என தனக்கான உடல்வாகுவில் மிகவும் நேர்த்தியான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரபுதேவா.

பிரபுதேவாவின் இதுவரை வந்த படங்களில், பொன்மாணிக்கவேல் கதாபாத்திரம் சற்று மாறுபட்டதுதான். வரவேற்புக்குறியது. நாயகியான நிவேதா பெத்துராஜ்ஜுக்கு படத்தில் பெரிதான் இடம் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஜோடி பொருத்தமாக இருந்தாலும், காதல் காட்சிகள் ஈர்ப்பு எட்டப்படவில்லை.

இருவருக்குமான உதிரா உதிரா பாடல் ரசனை ஏற்றுகிறது. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த இயக்குனர் மஹேந்திரனின் நடிப்பு, அனுபவத்தை காட்டியது.

ஸ்டைலிஷ் வில்லன்களாக சுரேஷ் மேனன் மற்றும் சுதன்சு பாண்டே இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். கம்பீரமான தோற்றத்தில் பாகுபலி பிரபாகரின் நடிப்பு கவனம் ஈர்த்தது.

டி இமானின் இசையில் உதிரா உதிரா பாடல் கேட்கும் ரகம். பின்னனி இசை மிரட்டலாககொடுத்திருக்கிறார். கே ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

படத்தில் ட்விஸ்ட்க்குமேல் ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர்.ஆனால், வைக்கப்பட்ட அந்த ட்விஸ்ட் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லாததால் படத்தின் வேகமும் ஈர்ப்பும் சற்று குறைகிறது.

பெண்களின் பாலியல் வன்கொடுமைகளை மையப்படுத்தி, குற்றம் செய்தவர்களை இப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டு எடுக்கப்பட்ட கதையை நாம் வரவேற்க கடமைபட்டாலும், அது மக்கள் மத்தியில் சென்றடைய இன்னும் சில பயிற்சியை முயற்சியை இயக்குனர் எடுத்திருந்திருக்கலாம்.

மற்றபடி பொன்மாணிக்கவேல் – வெறுக்கும்படியாக இல்லை.

Facebook Comments

Related Articles

Back to top button