நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளமாக மழை நீர் ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழைநீரில் மூழ்கி சன்னியாசிகுண்டுவை சேர்ந்த புஷ்பா என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல் துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதுகுறித்து, சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட இன்று ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் 36.28 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 13.38 செ.மீ., ஏற்காட்டில் 11.68 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் சராசரியாக 2.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
கடலில் 35 முதல் 45 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
மேலும், தென்மேற்கு பகுதிகளில் இருந்து வீசும் பலத்த காற்று வீசும் என்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இருந்து வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சற்றுமுன், சென்னை போரூர் காரம் பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மேலும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் மிக கனமழை பெய்துவருகிறது.