Spotlightசினிமா

எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் – நடிகர் சிம்பு புகழாரம்!!

கே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் என் ஃபேவரைட் பாடல் நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.

குறும்படங்கள் இயக்கி வந்த நேரத்தில் ஒரு பெரிய கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. 21 வயதில் ஈஸியாக வாய்ப்பு கிடைச்சிருச்சுனு நினைச்சேன். ஆனா அது நடக்கல, அப்போ தான் சினிமான்னா என்னனு தெரிந்து கொண்டேன். சில வருட போராட்டத்துக்கு பிறகு, யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிற படத்துக்கு காதல் கதை கேட்குறாங்கனு கேள்விப்பட்டேன். அந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளர்னு சொன்னாங்க. கரும்பு தின்ன கூலியா, இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று நினைத்தேன் என்றார் இயக்குனர் இளன்.

படத்துலயும் நிறைய காதல் இருக்கு, படத்து மேலயும் நிறைய பேருக்கு காதல் இருக்கு. அதனால் தான் இந்த படம் இன்னைக்கு இந்தளவுக்கு வந்திருக்கு. இளன் என்னை விட 2 வயசு சின்னவர். இவ்வளவு இளமையான ஒரு படத்தை கொடுத்திருக்காரு. சின்ன வயசுல இருந்தே யுவன் பாடல்களை கேட்டு வளர்ந்தவன். இன்று அவர் தயாரிக்கும் முதல் படத்தில், அவர் இசையில் நாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றார் நாயகன் ஹரீஷ் கல்யாண்.

இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளைய இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு தர்மதுரை படத்திலும், அடுத்து கண்ணே கலைமானே படத்திலும் இணைந்து எங்கள் உறவு பலமானது. அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், நான் இயக்கும் படத்தை யுவன் தான் தயாரிக்க இருக்கிறார் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

இளையராஜா சார் சாயல் இல்லாம யாரும் இசையமைப்பாளரா இருக்க முடியாது. யுவனும் விதிவிலக்கல்ல. யுவன் ரொம்ப லேட்டா தான் மியூசிக் கம்போஸ் பண்ணுவார். யோகி படத்துக்கு பிறகு கம்போஸிங்கிற்கு ஃபிரான்ஸ் போனோம். ஒரு வேலையும் செய்யாமலே திரும்பி வந்தோம். ஆனால் மியூசிக் போட ஆரம்பிச்சுட்டார்னா 5 நிமிஷம் தான். என்னுடைய 5 படத்துக்கும் ஒரே டேக்ல தான் பாட்டு போட்ருக்கார் யுவன். யுவன் இசையை விட்டு விலகினால் தான் உண்டு, இசை யுவனை விட்டு என்றைக்கும் விலகாது என்றார் இயக்குனர் அமீர்.

கற்றது தமிழ் படத்துக்கு இசையமைக்க யுவனை சந்திக்க நா.முத்துக்குமாரும் நானும் போனோம். அதன் பிறகு தங்க மீன்கள் சின்ன பட்ஜெட் படம், வேற இசையமைப்பாளர் போலாம்னு நினைச்சப்போ சம்பளம் பத்தி யாரு பேசுனா, அப்படினு சொல்லி இசையமைத்து கொடுத்தார். இன்று வரை பெரிய படம், சின்ன படம்னு பார்க்காமல் எல்லோரையும் சமமாக மதிப்பவர் யுவன் என்றார் இயக்குனர் ராம்.

யுவன் சின்ன வயசுல இருந்து நிறைய படங்களுக்கு, பாடல்களுக்கு இசையமைத்து விட்டார். அவர் கிட்ட புதுமையான விஷயங்கள் எதுவும் வராததால, கொஞ்சம் ஸ்லோ ஆகிட்டார்னு நினைக்கிறேன். நல்ல நல்ல படங்கள் அமையும்போது இந்தியாவின் மிகப்பெரிய இசையமைப்பாளரா இருப்பார் என்றார் இயக்குனர் அகமது.

எல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என்றார் தனுஷ்.

இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது என்றார் நடிகர் சிம்பு.

120 படங்கள் இசையமைத்திருக்கிறேன், ஆனால் எந்த ஒரு படத்தின் விழாவுக்கும் என் அப்பா வந்ததே இல்லை. நான் வந்து உன்னை ப்ரமோட் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டார். இப்போது படம் தயாரிச்சிருக்கேன் வாங்கனு சொன்னேன். வந்திருக்கார் என்று யுவன் வரவேற்க மேடைக்கு வந்த இசைஞானி இளையராஜா பேசும்போது, “பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் என்றார் இசைஞானி இளையராஜா.

முதல் முறையாக யுவன் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நான் ஏற்கனவே படம் தயாரித்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் அவருக்கு ஆதரவாக இங்கு வந்திருக்கிறேன். அவரின் சர்வம் ஆல்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பின்னணி இசையில் யுவன் ஒரு ராஜா. சமீபத்தில் கூட பேரன்பு பின்னணி இசை மிகச்சிறப்பாக இருந்தது என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.

நான் பள்ளியில் படிக்கும்போது துள்ளுவதோ இளமை இசையை கேட்டு யுவன் ரசிகன் ஆனேன். இன்று வரை எப்படி இளைஞர்கள் நாடித்துடிப்பை அறிந்து யுவன் பாடல்களை கொடுக்கிறாரோ தெரியவில்லை என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

நான் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடி பரிசு பெற்றது எல்லாமே யுவன் ஷங்கர் ராஜா சார் பாடல்கள் தான். தூரத்தில் இருந்து பார்த்த யுவன் சாரை இங்கு பக்கத்தில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker