
ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘டெடி’. நெட்ப்ளிக்ஸ் ஹாட்ஸ்டாரில் இன்று முதல் இப்படம் வெளிவந்துள்ளது.
கதைக்குள்…
எப்போதும் படித்துக் கொண்டே இருக்கும் இளைஞன் ஆர்யா. ஒருமுறை படித்துவிட்டால் அதை மறக்காமல் மூளையில் ஏற்றிக் கொள்ளக்கூடிய திறமை அவரிடம் உண்டு.
ஒரு சிறிய விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் சாயிஷா. அங்குள்ள உறுப்புகள் திருடும் கும்பலால், கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார். அவரது எனர்ஜி (இறப்பதற்கு முன் ஆவியாகுவது என்றும் வைத்துக் கொள்ளலாம்), அந்த ஆவி அங்குள்ள ஒரு டெடி பொம்மைக்குள் சென்று விடுகிறது.
அந்த டெடிக்குள் இருக்கும் சாயிஷாவிற்கு என்ன செய்வது என்றறியாது, ஆர்யாவிடம் செல்கிறார். தனது கதையை அவரிடம் கூறுகிறார்.
ஆர்யா என்ன செய்தார். ?? ஆர்கன் திருடும் கும்பலை ஆர்யா கண்டுபிடித்தாரா..?? சாயிஷாவின் உடலுக்குள் அவரது உயிர் சென்றதா..?? இல்லையா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.
தாடி வளர்த்த நாயகன் ஆர்யா, வழக்கம்போல் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.
எதையும் ஃபெர்பெக்டாக செய்யக்கூடிய, எதையும் சுத்தமாக வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் பொம்மை போலவே அழகாக நடித்திருக்கிறார். அதிலும் ‘ என் இனிய தனிமையே…’ பாடல் இளைஞர், இளைஞிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல். அப்பாடலில் ஆர்யாவை நேசிக்காதவர்களும் நேசிப்பார்கள்.
படத்தின் ஆரம்பக் காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வரும் சாயிஷாவின் நடிப்பு அழகு. அழகு சிலையாக வந்து செல்கிறார்.
டெடியின் சுட்டித் தனம் குழந்தைகள் மத்தியில் நிச்சயம் பெரும் வரவேற்பை பெரும். சதீஷ், கருணாகரன் நடிப்பில் காட்டிய காமெடிக்கு சற்று சோதனை தான்.
இயக்குனர் மகிழ் திருமேனி படத்தின் வில்லனாக வந்தாலும் மொத்தமாக மூன்று காட்சிகள் மட்டுமே இருப்பதால் பெரிதாக அவரது கதாபாத்திரம் ஈர்க்கவில்லை. இவரது குரலுக்கு பல ரசிர்கள் உள்ளனர்.
இமான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளது. பின்னனி இசையும் மிரட்டியிருக்கிறார்
யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். அனைத்து காட்சிகளையும் அழகுபடுத்தி காட்டியுள்ளார். வெளிநாட்டு காட்சிகளும் அற்புதம்.
கார்கியின் வரிகளில் என் இனிய தனிமை – ரசனை
சிவநாதீஸ்வரனின் எடிட்டிங் – ஷார்ப் கட்டிங்
சக்தி சரவணின் சண்டைக் காட்சிகளில் இரயில் வரும் சண்டைக் காட்சி மிரட்டல்
வித்தியாசமான கதைக்களமாக இருந்தாலும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்களா என்பது சற்று சந்தேகம் தான். டெடியின் சுட்டித்தனமான பயணம் இருப்பதால் குழந்தைகள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
டெடி – ரசிக்கலாம்..