
தல தோனியின் ஒரு செயலுக்காக ஐசிசி ஒரு கடிதம் போட்டுள்ளது. பிசிசிஐ.,க்கு போட்டுள்ள அந்தக் கடிதம் இப்போது தோனிக்கு ஆதரவாக ரசிகர்களைத் திரட்டியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் சந்தித்த முதல் போட்டியில் அசத்தலாக இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது, தோனியின் கையில் போட்டிருந்த விக்கெட் கீப்பிங் க்ளவுஸ்! பச்சை வண்ணத்தில் நடுவே ஒரு சூலம் போன்று வெள்ளையாகத் தெரிந்த லோகோ. அப்படி என்ன அந்த முத்திரையில் என்று பலரும் கவனித்துப் பார்த்தனர். அது, இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை என்று அறிந்து கொண்டனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். பல நேரங்களில் ராணுவ வீரர்களுடன் உரையாடும் அவர், தான் சார்ந்த ராணுவ பிரிவுக்கு மரியாதை சேர்க்கும் விதமாக, தனது விக்கெட் கீப்பிங் க்ளவுசில் இந்த முத்திரையைப் பதிந்து வைத்துள்ளார். இருப்பினும், இந்த முத்திரையை தோனி நீக்க வேண்டும் என்று, இண்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி, பிசிசிஐ -க்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டது.
சர்வதேசப் போட்டிகளில் அரசியல், மதம், இனவாதம் குறித்த குறியீடுகளை வெளிப்படுத்தக் கூடாது என்பது விதி. ஆனால், தோனி அணிந்திருப்பது இவை எவையும் இல்லை. அது ராணுவத்தின் ஒரு குறியீடு!
இந்நிலையில் ஐசிசியின் இந்தக் கடிதத்துக்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐசிசி விதிகளின் கீழ் உள்ள தடைசெய்யப்பட்ட குறியீடுகளில், ராணுவத்தின் முத்திரை வராது என ரசிகர்கள் ஐசிசி.,க்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, டிவிட்டரில் #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
இது தோனி இந்திய ராணுவத்துக்குச் செய்யும் மரியாதை! இதில் அரசியலோ மதமோ சமூகம் சார்ந்த விஷயங்களோ இல்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐசிசியின் கோரிக்கையை ஏற்று க்ளவுஸில் இருக்கும் ராணுவ முத்திரையை தோனி நீக்குவாரா என்பது அடுத்த போட்டியில் நிச்சயம் தெரிஞ்சும்!





