Spotlightசினிமாவிமர்சனங்கள்

ஆடு ஜீவிதம் விமர்சனம் 4/5

பிரபல மலையாள இயக்குனர் ப்ளஸ்ஸீ தாமஸ் இயக்கத்தில் ப்ருத்வி ராஜ், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கோகுல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஆடு ஜீவிதம்.

பல மொழிகளில் இப்படம் வெளிவந்திருக்கிறது. சுனில் கே எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கதைக்குள் சென்று விடலாம்..

நாயகன் பிரித்வி ராஜ் மற்றும் கோகுல் இருவரும் பிழைப்பிற்காக அரபு நாட்டிற்குச் செல்கின்றனர். கர்ப்பிணியான அமலாபாலை ஊரிலேயே விட்டுவிட்டு அரபு நாட்டிற்கு வருகிறார்.

மொழி தெரியா ஊருக்குள் செல்லும் இருவரை ஒருவர் வந்து அழைத்துச் செல்கிறார். அடந்த பாலைவனமாக இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று இருவரையும் வேறு வேறு இடத்தில் தங்க வைக்கிறார்.

அதன்பிறகு தான் இருவருக்கும் தெரிய வருகிறது, கம்பெனி வேலை என்று சொல்லி அழைத்து வந்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட வைக்க வைத்தது.

பிரித்வி ராஜ் அங்கிருந்து தப்பிக்க நினைக்க, ஆனால் தொடர்ச்சியாக அங்கு இருப்பவரால் தாக்கப்பட, அங்கிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் அடர் பாலைவனமாக இருப்பதால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியா சூழலில் சிக்கிக் கொள்கிறார் பிரித்வி.

வருடங்கள் உருண்டோட, சரியான சாப்பாடு இல்லாமல், குளிக்காமல் உடலை பேண முடியாமல் வேறு விதமான தோற்றத்திற்கு சென்று விடுகிறார்.

ஒருகட்டத்தில் கோகுலும் பிரித்வியும் சந்தித்துக் கொள்ள அங்கிருந்து தப்பிக்க ப்ளான் செய்கின்றனர் உடனிருக்கும் ஆப்ரிக்க நபரான ஜிம்மியின் உதவியோடு…

அந்த நரகத்தில் இருந்து இவர்கள் தப்பி சொந்த நாட்டை வந்தடைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ப்ரித்வி ஒட்டுமொத்த கதையையும் தனி ஒருவராக தன் தோள் மீது சுமந்து செல்கிறார். இந்த நபருக்கு ஆஸ்கர் விருதை கொடுக்காமல், வேறு யாருக்கு கொடுக்க போறீங்க என்று தான் கேட்க தோன்றுகிறது.

அப்படியொரு நடிப்பை இதுவரை யார் கொடுத்திருக்கிறார் என்று தான் தோன்றியது இவரது கதபாத்திரத்தை பார்த்த போது. மிகுந்த வலி நிறைந்த வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நம் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறார்.

இவரோடு சேர்ந்து இரண்டாம் பாதியில் வேறு ஒரு பெர்பார்மன்ஸை கொடுத்து நச்’சென ஸ்கோர் செய்திருக்கிறார் கோகுல்.

ஆப்ரிக்க நடிகரான ஜிம்மியும் போட்டி போட்டுக் கொண்டு தனது நடிப்பில் வேறு விதமான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரும் பலமே ஒளிப்பதிவு தான். ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்று தான் சொல்ல வேண்டும்.

எந்த இடத்தில் சைலண்ட் வேண்டுமோ அந்த இடத்தில் அமைதியாகவும் எந்த இடத்திற்கு இசை வேண்டும் அதை கொடுத்தும் அளவாக வேலை செய்து நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

பாடல்களும் மிகப்பெரும் பலம்.

ஒரு உண்மைச் சம்பவத்தை, அதன் வலியும் வழியும் மாறாமல் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு வலியாகவும் கொடுத்து வென்றிருக்கிறார் இயக்குனர்.

மூன்று மணி நேரமும் எந்த இடத்திலும் கைபேசியை எடுக்காமல், படத்திற்குள் சென்றால் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பெரும் வாழ்வியலை கண்முன்னே நிறுத்திய பெருமை ஆடு ஜீவதம் படத்தைச் சாரும்.

ஆடு ஜீவிதம் – வழியில் வலி..

Facebook Comments

Related Articles

Back to top button