Spotlightசினிமாவிமர்சனங்கள்

வெப்பம் குளிர் மழை விமர்சனம் 3.25/5

பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் நடிகர்கள்: எம் எஸ் பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலக்‌ஷ்மி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் படம் தான் வெப்பம் குளிர் மழை.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ப்ரித்வி ராஜேந்திரன். ஷங்கர் இசையமைத்திருக்கிறார்.

Hashtag FDFS productions சார்பாக திரவ் இப்படத்தினை தயாரித்திருக்கிறார். இவரே எடிட்டிங் பணிகளையும் செய்திருக்கிறார்.

கதைக்குள் பயணப்படலாம்….

நாயகன் திரவ் மற்றும் நாயகி இஸ்மத் பானு இருவரும் கணவனும் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தில் பயணப்படுகிறது இவர்களது வாழ்க்கை.

ஐந்து வருடமாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், கிராமத்தில் இவர்களை பார்ப்பவர்கள் அனைவரும் இதை ஒரு குறையாகவே சொல்லி ஜோடியை குத்தி காட்டிக் கொண்டே இருக்கிறது.

இதனால் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் இருவரும். மருத்துவத்தின் மீது பெரும் நம்பிக்கை இல்லாததோடு மட்டுமல்லாமல், வைராக்கியம் கொண்டவராகவும் இருக்கிறார் நாயகன் திரவ்.

இருந்தாலும் மனைவியின் வற்புறுத்தலால் இருவரும் மருத்துவமனை செல்கின்றனர். அங்கு, கணவனால் குழந்தை தர இயலாது என்பதை அறிந்து கொள்கிறார் மனைவி. இந்த விஷயம் கணவருக்கு தெரியாமல் பார்த்து கொள்ள, வேறு ஒருவரின் உயிரணுக்கள் மூலம் குழந்தை பெற்றெடுக்கிறார் பானு.

வருடங்கள் உருண்டோட, ஒருநாள் அந்த குழந்தை தனக்கு பிறந்ததல்ல என்று அறியும் போது நாயகன் திரவ் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் திரவ், அக்கதாபாத்திரமாகவே மாறி தனது நடிப்பில் சற்று வித்தியாசம் காட்டியிருக்கிறார். முதல் படம் என்பது போல் இல்லாமல், அனுபவ நடிகரின் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

நாயகி பானு இப்படத்திற்கு மிகப்பெரும் பலம். குழந்தை இல்லாதிருந்தால் ஊரும் உறவினர்களும் என்ன மாதிரியான பார்வைகளை பார்ப்பார்கள் அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதை தரையில் பார்ப்பது போன்று திரையில் கொண்டு வந்திருக்கிறார் பானு.

நாயகனின் அம்மாவாக நடித்த ரமா, அனைவராலும் பெரிதாகவே பாராட்டப்படுவார். ஒருகட்டத்தில் மருமகள் பக்கம் நிற்கும் போது நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் தான். அதுமட்டுமல்லாமல், கிராம வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்த ஒளிப்பதிவாளரின் பணி வெகுவாகவே பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ஒரு அழகான கிராம ஓட்டத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். இருந்தாலும், சீரியல் போன்ற கதையின் நகர்வை சற்று தவிர்த்திருந்திருக்கலாம்.

வெப்பம் குளிர் மழை – ஏற்ற இறக்கம் தான்…

Facebook Comments

Related Articles

Back to top button