
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி – கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்திருக்கும் படம் தான் “தி வாரியர்”. இயக்குத்தில் கொடிகட்டிப் பறந்த இயக்குனர் லிங்குசாமி சில வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்திருக்கும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தன. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறாரா இல்லையா என்பதை தற்போது விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
நாயகன் ராம் பொத்தினேனி சென்னையில் மருத்துவ படிப்பை முடிக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர, தனது தாய் நதியாவுடன் அங்கு செல்கிறார்.
மதுரையில் ரவுடியாக வரும் ஆதி, அங்கு தனது சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். பல கொலைகளை செய்து மிகபெரும் ரவுடியாக வலம் வருகிறார் ஆதி.
ஒருகட்டத்தில், ஆதியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ராம் பொத்தினேனிக்கு வருகிறது. இதனால் கோபமடைந்த ஆதி, ராம் பொத்தினேனியை அடித்து விடுகிறார்.
அங்கிருந்து உயிர் பிழைத்து தப்பிவிடுகிறார் ராம். 2 வருடம் கழித்து மீண்டும் மதுரைக்கு போலீஸ் டி எஸ் பி’யாக வருகிறார்.
அதன்பிறகு ஆதியை எப்படி பழிவாங்கினார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
நாயகன் ராம் பொத்தினேனி, தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவு தான் என்றாலும், தமிழுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நடனத்திற்கு 100 மார்க் கூட கொடுக்கலாம். ஆக்ஷனிலும் அதிரடி காட்டியிருக்கிறார்.
நாயகி கீர்த்தி ஷெட்டி வழக்கம் போல அழகு தேவதையாக வந்து செல்கிறார். இருந்தாலும், நடிப்பில் இன்னும் அந்த அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கும் நடனத்திற்கு 100 மதிப்பெண் தாராளமாக கொடுக்கலாம்.
வில்லனாக ஆதி மிரட்டியிருக்கிறார். அதிலும், அவர் எண்ட்ரீ ஆகும் காட்சியில் டி எஸ் பி’யின் பின்னணி இசை இன்னும் மாஸாக இருக்கிறது. ஹீரோவை விட வில்லனுக்கு தான் அதிகமான எதிர்பார்ப்பை கொடுக்க வைத்திருக்கிறது.
படத்தின் கருவில் பெரிதான பலம் இல்லை என்பதால் தொடர்ந்து கதையில் நம்மால் பயணிக்க தயக்கம் ஏற்பட்டு விடுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த பல சினிமாக்களை மிக்ஸியில் அரைத்து வாரியர் என்ற படத்தை கொடுத்திருக்கிறார் லிங்குசாமி. அதிலும், வசனங்கள் படத்திற்கு மிகப்பெரும் பலவீனம்.
நடிகர்கள் பேசும் வசனத்தை முன்கூட்டியே படம் பார்ப்பவர்கள் கனித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்டது போல் ஒரே இடத்தில் படத்தின் அதிக காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
நாயகி கீர்த்தி ஷெட்டி பாடலுக்கு, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு மூலதனம் வேண்டும் என்பதற்காகவும் தேவைப்பட்டிருப்பார் போல..
படம் முழுக்க முழுக்க சீரியஸாக சென்று கொண்டிருக்கிறது. எந்த இடத்திலும், காமெடி என்ற ஒன்றுகூட இல்லாதது பெரும் ஏமாற்றம் தான்.
இருந்தாலும், ஆக்ஷன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ட்ரீட் தான். மேலும், படத்தில் இடம் பெறும் புல்லட் பாடலுக்காகவது படத்திற்கு ஒரு முறை சென்று வரலாம்.
டி எஸ் பி’யின் இசை படத்திற்கு சற்று ஆறுதல். பின்னணி இசை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு கலர்புல் தான்.