
நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள டிடிவி தினகரன்,
”தமிழக மாணவச்செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ,பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது ? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது? நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் இரண்டாண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது?
பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.





