Spotlightவிமர்சனங்கள்

நித்தம் ஒரு வானம் – விமர்சனம் 3/5

றிமுக இயக்குனர் ரா கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி, ரிதுவர்மா, ஷிவாத்மிகா, ஷிவாதா, காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் நித்தம் ஒரு வானம். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கதைப்படி,

நாயகன் அசோக் செல்வன், எதிலும் சுத்தமாகவும், பெர்ஃபெக்டாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணுபவர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு பெற்றோர்களால் திருமணத்திற்கு பெண் பார்க்கப்படுகிறது. பெண்ணும் இவருக்கு பிடித்துப் போக, திருமணத்திற்கு முன் இருவரும் பரஸ்பரமாக பேசிக் கொள்கின்றனர். இந்த வாழ்க்கை அசோக் செல்வனுக்கு மிகவும் பிடித்து போகிறது.

இந்த சூழலில், திருமணத்திற்கு முன்தினம் தனது முன்னாள் காதலை அசோக் செல்வனிடம் கூறுகிறார் மணப்பெண்.

அதற்கு அசோக் செல்வன் அட்வைஸ் கூற, தனது காதலனோடு சென்று விடுகிறார் மணப்பெண். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார் அசோக் செல்வன்.

மருத்துவரான அபிராமிடம் அசோக் செல்வன் செல்கிறார். அங்கு, அவரிடம் இரண்டு டைரிகளை கொடுத்து, அதில் எழுதப்பட்டிருக்கும் இந்த இரண்டு உண்மை கதைகளை படிக்குமாறு கூறுகிறார் அபிராமி.

அக்கதைகளை படிக்கும் அசோக் செல்வன், இரண்டு டைரியிலும் இறுதி பக்கம் இல்லாததால் டென்ஷனாகி விடுகிறார். அந்த இரண்டு கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய வேண்டும் என்றால் அவர்களை தேடிச் செல் என்கிறார் அபிராமி.

அந்த இரண்டு டைரியில் எழுதப்பட்டிருந்த கதாபாத்திரங்களை தேடி கல்காத்தாவிற்கும் சண்டிகருக்கும் பயணப்படுகிறார் அசோக் செல்வன்.

அவர்களை சந்தித்த பின் அசோக் செல்வன் வாழ்க்கை எப்படி மாறியது என்பது தான் படத்தின் மீதிக் கதை..

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அக்கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் நடிகர் அசோக் செல்வன்.. பல படங்களுக்குப் பிறகு தனது நடிப்பில் சற்று முன்னேற்றம் கொடுத்து முன்னேறி வருகிறார். இப்படத்திலும் தனது கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார்.

படத்தில் வரும் மூன்று கேரக்டர்களையும் தனக்கே உரித்தான உடல் மொழியில் நடித்து முத்திரை பதித்திருக்கிறார் அசோக் செல்வன்.

நாயகிகளான அபர்ணா பால முரளி, ஷிவாத்மிகா, ரிது வர்மா என மூவரும் தங்களுக்கான அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தனர். அதிலும், ஷிவாத்மிகாவின் கண்கள் கவிதைகள் பல நூறு கூறிவிட்டுச் செல்கின்றன..

கதையின் நகர்வில் இன்னும் சற்று சுவாரஸ்யத்தை ஏற்றி, படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். கதையோடு வரும் பாடல்கள் படத்திற்கு சற்று வேகத்தடையாக மாறியுள்ளது. திரைக்கதையை சற்று வேகமாக நகர்த்தியிருக்கலாம்.

ஓரிரு பாடல்கள் ரசிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசை ஓகே ரகமாக இருக்கிறது. படத்திற்கு பெரிய பலம் என்றால் விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு இடங்களுக்கும் தனித்தனி ஒளியை கொடுத்து அழகை ரசிக்க வைத்திருக்கிறார்.

வசனங்கள், கதாபாத்திரங்களின் தேர்வு, கதை என அனைத்திலும் அறிமுக படத்திலேயே அக்மார்க் வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரா.கார்த்திக்.

நித்தம் ஒரு வானம் – நிதானம் 

Facebook Comments

Related Articles

Back to top button