
ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி நடிக்க ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இருவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “வீட்ல விசேஷம்”. ஹிந்தி படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது.
கதைப்படி,
சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினருக்கு இரு மகன்கள். மூத்தவரான ஆர் ஜே பாலாஜி பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். இரண்டாவது மகன் விஸ்வேஷ் பள்ளி பயின்று வருகிறார். சத்யராஜ் ரெயில்வேயில் டிடி ஆக பணிபுரிகிறார். சத்யராஜின் அம்மாவாக வருகிறார் லலிதா. இவர்கள் ஐவரும் மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். பாசமழையாக வாழ்ந்து வருகிறது இக்குடும்பம்.
பள்ளியின் ஓனர் மகளான அபர்ணா பாலமுரளியும் ஆர் ஜே பாலாஜியும் காதலிக்கிறார்கள். இன்னும் ஓரிரு வருடங்களில் தனது பணியில் இருந்து ரிட்டையர்ட் ஆகவிருக்கும் சத்யராஜ், அப்பாவாகிறார். ஆம், ஊர்வசி கர்ப்பமாகிறார்.
அந்த குழந்தையை வளர்க்க தயாராகிறார்கள் சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினர். இத்தகவலை அறிந்த ஆர் ஜே பாலாஜி மற்றும் அவரது தம்பி விஸ்வேஷ் பெற்றவர்களை வெறுக்கின்றனர். இந்த வயதில் குழந்தை தேவையா என வெளிப்புறத்தில் இருப்பவர்கள் பலரும் கேலியும் கிண்டலுமாக செய்து வருகின்றனர். இந்த பிரச்சனையில் ஆர் ஜே பாலாஜியின் காதலும் முறிகிறது.
இறுதியாக பெற்றவர்களை பிள்ளைகள் புரிந்து கொண்டார்களா.? ஆர் ஜே பாலாஜியின் காதல் கைகூடியதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஆர் ஜே பாலாஜி, கதையின் நாயகனாக பொருத்தமாக பொருந்தியிருக்கிறார். இவர் அடிக்கும் கவுண்டர் காமெடிகள் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஜோடிப் பொருத்தம் கதைக்கு பக்கா பொருத்தம்.
இந்த ஜோடிகள் அடிக்கும் லூட்டிகள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. சத்யராஜின் தாயாக நடித்திருக்கும் லலிதா, தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தனது மருமகள் ஊர்வசி மீது வைத்திருக்கும் பாசத்தை சொல்லும் போது கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார்.
அபர்ணாவின் நடிப்பையும் பாராட்டலாம். அழகான தேவதையாக வந்து செல்கிறார். ஆர் ஜே பாலாஜியிடம் அட்வைஸ் செய்யும் காட்சிகளில் மிளிர்கிறார்.
அழகான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கின்றனர் ஆர் ஜே பாலாஜியும் & என் ஜே சரவணனும். திரைக்கதையை கொண்டு செல்லும் இடத்தில் மிகவும் கவனமாக கையாண்டிருக்கின்றனர் இருவரும்.
இரண்டாம் பாதி ஆரம்பத்தில் சற்று சிறிய தொய்வு இருந்தாலும், அடுத்த நிமிடமே சுதாரித்து டாப் கியர் போட்டு செல்கிறது இப்படம்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு & கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை இரண்டையும் பாராட்டலாம்.
செல்வா அவர்களின் படத்தொகுப்பு ஷார்ப்.
பல இடங்களில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்காக காமெடி காட்சிகளை கட்சிதமாக கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பி வாசு, கே எஸ் ரவிக்குமார் & சுந்தர் சி ஆகிய மூவரையும் கெளவரவித்தார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.
ஏன் என்பது இப்போது தான் தெரிகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் படத்தைப் போன்று குடும்பபாங்கான குடும்பத்தோடு பார்க்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்…
வீட்ல விசேஷம் – குடும்பத்தோடு விசேஷத்துக்கு போயிட்டு வரலாம்…