Uncategorized

கல்விக் கூடங்களை எச்சரிக்கும் செல்ஃபி – தங்கர்பச்சான்

 

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக செல்ஃபி படத்தை பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான், படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். மேலும் தனது சமூக வலைதள பக்கத்தில் படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதில்,

‘எச்சரிக்கை’

கல்விக்கூடங்கள் பணம் கொள்ளையடிக்கும் கூடங்களாக உருவாக்கப்பட்டப்பின் தமிழ் நாடு அதன் கல்வியின் தரத்தை இழந்து வருகின்றது. இந்த தனியார் கல்விக்கூடங்கள் எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில் அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள் எனும் உண்மையை நேர்த்தியாக பொருள் உரைக்க பதிவு செய்வதுதான் “செல்பி” திரைப்படம்.

மதிமாறன் எனும் புதிய இயக்குநரின் ஆற்றலும் திறமையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அதேபோன்று குணாநிதி எனும் அறிமுக நடிகரின் இயல்பான மனம் கவரும் நடிப்பாற்றல் நம்பிக்கை ஊட்டுகின்றன. GV பிரகாஷ் முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கின்றார்! இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அவரின் திரைப்பயணத்தை மேலும் விரிவுப்படுத்தும்!

முழு திரைக்கதையின் மையப்புள்ளியான எதிர் நாயகன் பாத்திரத்தில் கவுதம் மேனன் நடிப்புதான் இத்திரைப்படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகின்றது. திரையில் தோன்றும் அனைத்து நடிகர்களும் சிறு பிசகில்லாமல் நடிப்பது ஒன்றே இயக்குநரின் திறனை பறை சாற்றும். கடலூர் மாவட்ட வட்டார வழக்கு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களைக் காப்பாற்றுவதாக கூறப்படும் நான்கு தூண்களும் அதன் மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படங்கள் தான் அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின் சிக்கல் சீர்கேடுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றன. “செல்பி” அதனை திறம்பட செய்திருக்கின்றது. வெறும் பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு இடையில் இப்படைப்பின் வரவு கவனத்துக்குறியது. என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button