Spotlightவிமர்சனங்கள்

விக்ரம் – விமர்சனம் 3.5/5

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் படம் வெளிவந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. எதிர்பார்ப்பை விக்ரம் நிவர்த்தி செய்தாரா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் பார்த்துடலாம்…

ஆரம்பிக்கலாமா..

”பத்தல பத்தல…” என்ற பாடலோடு ஆரம்பிக்கு படத்தின் கதையில், அடுத்த காட்சியிலேயே விக்ரம்(கமல்) கொலை செய்யப்படுகிறார். இதே போல் தொடர்ச்சியாக இரண்டு கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. இந்த கொலையை யார் செய்தார் எதற்காக செய்தார்கள் என்பதை கண்டறிய ஸ்பெஷல் டீம் வருகிறது. அந்த டீமின் தலைவனாக இருப்பவர் தான் பஹத் ஃபாசில்.

யார் இந்த விக்ரம் .? எதற்காக கொலை செய்யப்பட்டார் எந்த கோணத்தில் தனது இன்வஸ்டிகேஷனை தொடங்குகிறார் பஹத் & டீம். பல மர்மங்களின் முடிச்சிகளை அவிழ்க்கிறார் பஹத்.

போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக வரும் விஜய் சேதுபதி,. ஆயிரக்கணக்கான டன் அளவில் போலீஸாரால் கைப்பற்றட்ட போதைப் பொருளை, அவர்களிடம் கைப்பற்ற முயல்கிறார் விஜய் சேதுபதி.

இந்த போதை பொருள் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட மகனுக்காகவும் பேரனை காப்பாற்றவும் வில்லன்களை சூரையாடுகிறார் கமல்ஹாசன்.. இறுதியில் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

கொலை செய்யப்பட்ட கமல்ஹாசன் எப்படி வந்தார் என்ற கேள்விக்கு படத்தின் இடைவேளையில் பதில் கிடைக்கும்… இப்போதைக்கு முடிச்சி அவிழ்க்காமலே இருக்கட்டுமே…

நாயகனாக கமல்ஹாசன் தனி அவதாரமாக தெரிகிறார். இந்த வயதிலும் இப்படிப்பட்ட எனர்ஜிக்காக அவரை வெகுவாக பாராட்டலாம். ஜெயிலுக்குள் நடக்கும் சண்டைக் காட்சியாக இருக்கட்டும், வீட்டிற்குள் நடக்கும் சண்டைக் காட்சியாக கூட இருக்கட்டும் இரண்டிலும் கண் பார்வையிலேயே மிரள வைத்திருக்கிறார். செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என இரண்டிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். முதல் பாதியில் எங்கே சென்றால் கமல்ஹாசன் என்று தேடிக் கொண்டிருக்கும் வேளையில், இடைவேளையில் எண்ட்ரீ கொடுத்து, இரண்டாம் பாதி முழுவதையும் தனி ராஜாவாக ஆள்கிறார்.

முதல் பாதிமுழுவதையும் தனக்கே உரியதாய் இறங்கி விளையாடியிருக்கிறார் பஹத்.. கடினமான காட்சியைக் கூட மிக எளிதாக செய்து முடித்து தூக்கியெறிந்து சென்றிருக்கிறார் பஹத். பரபரவென செல்லும் கதைக்கு மேலும் வலுவாக அமைந்துள்ளது பஹத்தின் வேகம்.

வில்லனாக ஆர்ப்பரித்திருக்கிறார் விஜய்சேதுபதி. தனக்குள் இருக்கும் கோபத்தை பெரிதாக வெளிக்காட்டாமல், சைலண்ட் ஆக்‌ஷன் செய்து வித்தியாசம் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் எண்ட்ரீ மாஸ் ஓவர்லோடட் தான்.

மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சேம்பன் வினோத் ஜோஸ், கதாபாத்திரத்திற்கு தேவையானதை கனக்கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார்.

நரேன், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள். முதல் பாதியில் இருந்த ஒரு வேகம், இரண்டாம் பாதியில் சற்று குறைந்தது போன்ற உணர்வை கொடுத்துவிட்டார் இயக்குனர்.

ஆனால், முழுக்க முழுக்க “விக்ரம்” இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும்.

கதை, திரைக்கதை, காட்சியமைப்பு என ஒவ்வொன்றையும் ஷார்ப்பாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கமல் நடித்து 1986ல் வெளியான விக்ரம் படத்தையும் இதோடு இணைத்தது மட்டுமல்லாமல், லோகேஷின் கைதி படத்தையும் இந்த கதையோடு இணைத்து ஆச்சர்யப்பட வைத்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரனின் வேலைப்பாடுகள் கண்களை விரிய வைத்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஒளிப்பதிவை கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட். பின்னணி இசையிலும் தனது வழக்கமான மிரட்டலை கொடுத்திருக்கிறார்.

க்ளைமாக்ஸில் எண்ட்ரியாகும் சூர்யாவின் கதாபாத்திரம் அதிரடி காட்டியுள்ளது. மாஸான காட்சியால் திரையரங்கமே ஆர்ப்பரிக்கிறது. சூர்யாவின் லுக், வேற லெவல்…

விக்ரம் – வேட்டையில் வெறி கொண்டவன்…

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close